2025 ஆசிய கோப்பையில் செப்டம்பர் 14 அன்று இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர், இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்றும், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை பட்டியலிடப்படாவிட்டால் மனு பயனற்றதாகிவிடும் என்றும் வாதிட்டார்.
இது குறித்து, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, நீதிபதி விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இதில் என்ன அவசரம்? இந்த ஞாயிற்றுக்கிழமை போட்டி? இதில் நாம் என்ன செய்ய முடியும்? அது நடக்கட்டும். போட்டி தொடர வேண்டும்” என்று கூறினர். அப்போது குறிக்கிட்ட வழக்கறிஞர், ‘‘எனது வழக்கு மோசமாக இருக்கலாம். ஆனால் தயவுசெய்து அதைப் பட்டியலிடுங்கள்’’ என்று கூறினார். இதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
உர்வசி ஜெயின் தலைமையிலான நான்கு சட்ட மாணவர்கள் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘‘பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்வது தேசிய கண்ணியம், பொது உணர்வுக்கு எதிரானது. இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் நல்லெண்ணத்தையும் நட்பையும் காட்டுவதற்காகவே என்று அது கூறுகிறது. ஆனால் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நமது மக்கள் தியாகம் செய்யப்பட்டு, நமது வீரர்கள் அனைத்தையும் பணயம் வைத்தபோது, பாகிஸ்தானுடனான ஒரு போட்டி நாட்டிற்கு தவறான முன்னுதாரணம்.
நமது வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் அதே வேளையில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அதே நாட்டோடு விளையாட்டைக் கொண்டாடப் போகிறோம். இது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கைகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகளையும் புண்படுத்தக்கூடும். நாட்டின் கண்ணியமும், குடிமக்களின் பாதுகாப்பும் பொழுதுபோக்குக்கு முன் முக்கியமா? என்று மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டி தொடர்பாகவும் விவாதங்கள் பரபரபை கிளப்பி வருகின்றன. சிவசேனா (உத்தவ்) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் இந்தப் போட்டி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘‘இந்தப் போட்டியை நாங்கள் எதிர்ப்போம். ஒரு போராட்டமாக நாங்கள் ‘சிந்தூர் ரக்ஷா அபியான்’ நடத்துவோம். அப்போது, பெண்கள் சாலையில் போராட்டம் நடத்துவார்கள்.
தண்ணீரும், இரத்தமும் ஒன்றாகப் பாயவில்லை என்றால், இரத்தமும், கிரிக்கெட்டும் மட்டும் எப்படி ஒன்றாகப் பாயும்?” ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. பஹல்காமில் 26 பெண்களின் சிந்தூர் (குங்குமம்) அகற்றப்பட்டது. அவர்களின் வலி, துக்கம், கோபம் இன்னும் தொடர்கிறது. இன்றும் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்போது நீங்கள் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடப் போகிறீர்கள். இது வெட்கக்கேடு, துரோகம்.
பாஜக, மத்திய அரசு, விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் ஆகியோருக்கு இந்த விஷயத்தில் ஏதேனும் பங்கு இருக்கிறதா? எனது கோபம் அரசாங்கத்தின் மீது அல்ல, பாஜக மற்றும் பிற அமைப்புகளின் மீது இருக்கிறது’’ என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
