ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில்பங்கு என திடீர் உரிமை குரல் எழுப்பு இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘‘சக்கையாக பார்க்கப்படுவது தான் காங்கிரஸ், என்றாலும் சாறை சுவைப்பது என்னவோ திமுகதான்’’ என பேசி இருப்பது அரசியல் களத்தை உற்றுநோக்க வைத்திருக்கிறது.
தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டு வரும் நிலையில் கூட்டணி பேரத்திற்காக குரல் எழுப்புகிறதா காங்கிரஸ்? அல்லது தவெக கூட்டணிக்காக கதவை திறக்க முடிவு செய்திருக்கிறதா? சாறை அவர்கள் குடிப்பதாகவும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமாக திமுகவை நம்பி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு செல்கிறதோ? இல்லையோ? இருக்கின்ற இடத்தில் சீட் பேரத்தை உயர்த்த தவெகவை ஊறுகாய் போல தொட்டுக் கொள்வது தான் இன்றைய அரசியலில் எதார்த்தம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழக அரசியலில் தவழும் குழந்தையான தவெகவை தாங்கிப் பிடிப்பதற்கான கட்சி இல்லாமல் தடுமாறி வருவதாக சொல்லப்பட்டாலும், தனக்கு இருக்கும் இளைஞர், இளைஞிகள் பட்டாளத்தை வைத்து கொண்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கட்சி ஆரம்பித்தவுடன் நடத்திய முதல் மாநில மாநாட்டில் கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கு தூண்டில் போட்டார் விஜய். அப்போது முதல் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற பொறியை வைத்து காத்துக் கிடக்கிறார். ஆனால் தூண்டிலைப் பார்த்து உஷாரான தமிழக கட்சிகள் அதை இருக்கும் பொறியை மட்டும் இழுத்து பதம் பார்க்க பார்ப்பது நிதர்சனமான உண்மை.
விஜய் பற்ற வைத்த கூட்டணி ஆட்சி என்ற நெருப்பின் பங்கெடுத்து தங்களது கூட்டணியில் கொளுத்திப்போட்ட கட்சிகள் அந்த கனலில் குளிர் காய தொடங்கிவிட்டன. குறிப்பாக அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஆட்சி என்ற கருத்தில் வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டனர். திமுக கூட்டனியில் உள்ள விசிகவோ அதிகாரப் பசியோடு இருந்தும்கூட, திமுக தலைமையின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவை தொட்டுப் பார்த்துவிட்டு எட்டி ஓடுகிறது.
இந்த நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி போகிற போக்கில் கருத்தை கூறிவிட்டு தேன் கூட்டில் கல்லெறிந்து இருக்கிறார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்போம் என உறுதியாகச் சொன்ன கே.எஸ்.அழகிரி, ‘‘கரும்புச்சாறை திமுக சுவைப்பதும், சக்கையை காங்கிரஸ் பார்ப்பதும் வழக்கமாக உள்ளது’’ என ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் பேசி இருக்கிறார் அழகிரி. இதே கருத்தைத்தான் கடந்த ஜூன் மாதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
2006 சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் 63 இடங்களில் களம் கண்டது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களாக சுருங்கிப் போனது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கழுதை தேய்ந்து கட்டருமான கதையாய் வெறும் 25 இடங்களில் மட்டும் தான் போட்டியிட்டது. இந்த முறை எப்படியாவது 50 சீட்டுகளுக்கு மேல் இடங்களை பெற்று விட வேண்டும் என துடியாய் துடிக்கும் காங்கிரஸ் மேலிடம், அதற்கான தகவல்களை தான் அழகிரி மூலம் ஆரம்பித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக கடந்த இரு சட்டமன்ற தேர்தல்களிலும் பெரும் சர்வை நோக்கி சென்ற காங்கிரஸ், இந்த தேர்தலில் மீள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் வேறு சாய்ஸ் இல்லாததன் காரணமாக திமுக மீது சவாரி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும், ஆனால் இந்த முறை தவெக என்னும் புதிய வரவு வந்திருக்கிறது. அங்கேயும் துண்டை விரித்து சவாரி செய்யலாம் என விரும்புகிறது காங்கிரஸ் மேலிடம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணியை கட்டமைக்கும் விஜயுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் மேலிடம் துவக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், திமுக என்ன முடிவெடுக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.
