பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிக்கை பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலூசிஸ்தான் தலைவர்கள் அவரது அறிக்கையை வரவேற்று முறையான ஆதரவை தெரிவித்துள்ளனர். ‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் இல்லாமல் மீண்டும் கைப்பற்றும்’’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார்.
மொராக்கோவில் உள்ள இந்திய வெளிநாட்டினரிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே நம்முடையது ஆகிவிடும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. நீங்கள் அந்த முழக்கங்களைக் கேட்டிருக்க வேண்டும். ஜம்மு, காஷ்மீரில் நடந்த ஒரு இந்திய ராணுவ நிகழ்வில் உரையாற்றும் போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி இருந்தேன்’’ என ராஜ்நாத் சிங் கூறி இருந்தார்.
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கும் பலூசிஸ்தான் தலைவர்கள், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். பலூச் தலைவர் மிர் யார் பலூச், ராஜ்நாத் சிங்கின் அறிக்கையை ஆதரித்து சமூக ஊடக தளமான எக்ஸ்தளப்பதிவில், “இந்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையை பலூசிஸ்தான் குடியரசு பாராட்டுகிறது. 60 லட்சம் பலூசிஸ்தான் மக்களும் இந்தியாவுடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங்கின் அறிக்கையை பலூச் தலைவர்கள் ஆதரித்ததற்கான காரணம், பலூசிஸ்தான் குடியரசு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற தொடர்ந்து போராடி வருகிறது. இந்த அமைப்பு பல சந்தர்ப்பங்களில் இந்தியாவின் உதவியை பகிரங்கமாக நாடியுள்ளது. ஆனால் இந்தியா ஒருபோதும் பலூச்சை பகிரங்கமாக ஆதரித்ததில்லை.
பலூச் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “”பாகிஸ்தான் காஷ்மீரை தானாகவே நம்முடையதாக மாற்றும். பாக். காஷ்மீரில் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. நீங்கள் அந்த முழக்கங்களைக் கேட்டிருக்கலாம்” என்று கூறும் ராஜ்நாத் சிங்கின் சமீபத்திய கொள்கை அறிக்கையை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். “பாகிஸ்தான் காஷ்மீரை இந்தியாவுடன் மீண்டும் இணைப்பது ஒரு வரலாற்றுத் தேவை மட்டுமல்ல, பாகிஸ்தானின் ஊழல், அடிப்படைவாத இராணுவத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் பாக். காஷ்மீரின் மக்கள் அனுபவித்த பல்லாணடு கால துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நியாயமான படியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
