ஜிஎஸ்டியில் தற்போது செய்யப்படுள்ள மாற்றங்களால் பொதுமக்களின் கைகளில் பணம் புரளும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரியில் ( ஜிஎஸ்டி ) தற்போது செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரத்தை ரூ. 2 லட்சம் கோடி உயர்த்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராரன் தெரிவித்துள்ளார். இதனால் சாமானிய மக்களின் கைகளில் அதிக பணம் மிச்சமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பணம் இனி வரிகளாக அரசாங்கத்திற்குச் செல்லாது என்றும் அவர் பேசியுள்ளார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியின் கீழ், தற்போதுள்ள நான்கு வரி அடுக்குகள் (5%, 12%, 18% மற்றும் 28%) இரண்டாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய விகிதங்கள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
இந்த மாற்றத்தின் மூலம் இதற்கு முன்னர் 12 % வரி விதிக்கப்பட்ட 99 சதவீதப் பொருட்கள் இப்போது 5 % அடுக்குக்குள் உள்ளன என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். அதேபோல, இதற்கு முன்னர் 28 % வரி விதிக்கப்பட்ட 90 சதவீதப் பொருட்கள் இப்போது 18 % வரி விதிக்கப்படுகின்றன. பல பெரிய நிறுவனங்கள், எஃப்எம்சிஜி துறையில் உள்ளவை கூட, இந்த மாற்றத்தின் பலன்களை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக தானாக முன்வந்து விலைகளைக் குறைத்துள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
