தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அண்ணாமலைக்கு பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவ்வப்போது அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் மட்டுமே வெளியாகி வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதற்கான காரணத்தை ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி வெளிப்படையாகக் கூறியுள்ளார். அவர், ‘‘தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் இருந்து வந்த பாஜக தற்போது 4 தொகுதிகளில் காலூன்றி உள்ளது. தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக வளர வேண்டும் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இதில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததார். மித மிஞ்சிய வேகத்தில் அவர் செயல்பட்டார் என்பதே அவரது பதவி நீக்கத்துக்கு காரணமாக அமைந்து விட்டது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு களத்தில் இறங்கி அதிக அளவில் வேலை பார்க்க வேண்டியதை பாஜக தலைமை உணர்ந்துள்ளது. இதில், அண்ணாமலை தனது நலனுக்காக செய்து இருந்தாலும், கட்சியின் நலனுக்காக செய்திருந்தாலும் அது தவறாகி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சக்தியாக பாஜக மாறிவிட வேண்டும் என்பதை செயல் திட்டம்.
தமிழக பாஜக மாநில தலைவர் பதவி விவகாரத்தில் பாஜக தலைமை சரியான முடிவு எடுத்துள்ளது. பாஜக தலைமையின் உத்தரவுக்கு அண்ணாமலையும் உடன்பட்டார் என்று நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் அவருக்கு அதிருப்தி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கட்சி தலைமையின் யுக்தியை அண்ணாமலை புரிந்து கொண்டுள்ளார்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலையின் மித வேகத்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இதில், அதிமுக பாஜக இடையே உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டு இருந்தால் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். இது பிரதமர் மோடிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பாக அமைந்திருக்கும் என்கிற எண்ணம் பாஜகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் உள்ளது. இதற்கு தடையாக இருந்தது அண்ணாமலை எனக் கருதுகிறடு பாஜக தலைமை. அவரை பதவி நீக்க இதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
