புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு நாளும் பெருமாளை வழிபட்டு, அவரது அருளை பெறுவதற்கான சிறப்பான நாளாகும். இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது பல மடங்கு அதிக சக்தி கொண்டதாகும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் பாவங்கள் அனைத்தும் நீங்கி, செல்வம் பெருகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைக்கு மட்டும் ஏன் இத்த சிறப்புகள், புரட்டாசி மாதத்தில் மட்டும் ஏன் பெருமாள் வழிபாடு சிறப்புடையதாக சொல்லப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
புரட்டாசி விரதம் :
வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் அல்லவை நீங்கி நல்லவை சேரும், வளமான வாழ்வு வசப் படும் என்பது ஐதீகம். தடைகள் அகன்று மங்களம் அமையப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே புரட்டாசி மாதம் “பெருமாள் மாதம்” என்று சிறப்பிக்கப்படுகிறது.
புரட்டாசி வழிபாடு :
திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவமும் திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். சிலர் புரட் டாசி மாதத்தில் தான் தங்கள் நேர்த்திக் கடன்களையும் குலதெய்வ வழிபாடுகளையும் நிறைவேற்றுவர். வீடுகளில் விரதம் இருப்பவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, மாவிளக்கேற்றி, வடை பாயசத்துடன் அமுது சமைத்துப் படையலிட்டுப் பூஜையை நிறைவேற்றுவர். சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மடியேந்தியோ, உண்டியல் குலுக்கியோ தானம் பெற்று அதில் கிடைக்கும் அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவர்.
