இந்தியாவுக்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் நெருங்கி வருவதாகத் தெரிகிறது. இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்கா விரைவில் நீக்கக்கூடும் சூழல் உருவாகி உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள வணிகர்கள் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன், ‘‘இந்தியாவில் இருந்து சில அமெரிக்க இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீதம் வரையிலான கடுமையான வரிகள் விரைவில் நீக்கப்படலாம்’’ என்று தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறக்கூடும், வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்பதை உணர்த்துகிறது.
இந்தியா மீது அமெரிக்கா ஆரம்பத்தில் 25 சதவீத வரியும், அதைத் தொடர்ந்து கூடுதலாக 25 சதவீத வரியையும் விதித்தது. மொத்தம் 50 சதவீதம் வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்த தண்டனை வரி விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது சில சமீபகால] முன்னேற்றங்கள், பேச்சுவார்த்தைகள் காரணமாக, நவம்பர் 30 க்குப் பிறகு இந்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வரிக்கு அடுத்த சில மாதங்களில் தீர்வு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. இது வர்த்தகத்தை எளிதாக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும்.
இந்தியாவின் ஏற்றுமதிகள் சீராக வளர்ந்து வருகிறது. தற்போது, இந்தியாவின் ஆண்டு ஏற்றுமதிகள் சுமார் 850 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும். இது இந்தியாவின் வலுவான, வெளிப்படையான பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதி டிரம்ப், இந்தியா உட்பட பல நாடுகளின் மீது 1977 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் கடுமையான வரிகளை விதித்தார். இந்தியா 25 சதவீத வரியை எதிர்கொண்டது, பின்னர் அது 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த வரி அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து இந்திய பொருட்களுக்கும் பொருந்தும்.
