வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தவெக தலைவர் விஜய் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பரப்புரை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இதற்கான அனுமதி கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. திருச்சியில் நடந்த பரப்புரையின் போது தவெகவிற்கு 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அடுத்து நடைபெறவுள்ள பரப்புரைகளில் சிலவற்றுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தவெக தலைவர் விஜய் நடத்தும் பரப்புரைகளுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?தொண்டர்களை கட்சி தலைவர் ஒழுங்குபடுத்த வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
