நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஓர் உணவு. சோறு, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் என்று தொடங்கி முறுக்கு, அதிரசம் எனப் பல உணவுகள் அரிசியைப் பிரதானமாகக்கொண்டவை. இந்தியாவின் 60 சதவிகித மக்கள் சாப்பிடக்கூடிய உணவுப்பொருளாக இப்போதும் அரிசி இருந்துவருகிறது.
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு 4 லட்சம் நெல் ரகங்கள் இருந்ததாக, காலம் சென்ற ரிச்சாரியா என்ற நெல் விஞ்ஞானி குறிப்பிடுகிறார். இப்போதும் 1 லட்சம் நெல் ரகங்கள் இந்தியாவில் இருக்கும் என மதிப்பிடுகிறார். தமிழ்நாட்டிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது 200-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன.
ஒவ்வொரு நெல் ரகத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, உயர் விளைச்சல் ரகங்களின் வருகையால், நெல் விவசாயமே தலைகீழாக மாறிவிட்டது. அதேபோல, சாப்பிடும் முறையும் மாறிவிட்டது. இன்று யாரும் கடைகளுக்குச் சென்று ரகத்தின் பெயரைச் சொல்லி அரிசி வாங்குவதில்லை. அந்தந்த பிராண்டின் பெயர் சொல்லித்தான் அரிசியை வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
