பா.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கிய தனுஷ், நான்காவதாக இயக்கி உள்ள படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கல்யாணி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். தனுஷின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக அருண் விஜய்யும், அவரின் தந்தையாக சத்யராஜும், சகோதரியாக நடிகை ஷாலினி பாண்டேவும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இட்லி கடை திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்படம் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தான். இப்படத்திற்கு பான் இந்தியா அளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், இட்லி கடை படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரிவை சந்தித்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் காந்தாரா சாப்டர் 1 படத்தை விட அதிகளாவிலான திரையரங்குகளில் இட்லி கடை திரைப்படம் வெளியிடப்பட்டாலும், வசூலில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தான் லீடிங்கில் உள்ளது.
இட்லி கடை திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் 301 திரையரங்குகளில் திரையிடப்பட்டு, மொத்தம் 1645 காட்சிகள் போடப்பட்டு இருந்தன. இதன் மூலம் இப்படம் 4.27 கோடி வசூலித்து இருந்தது. இது சனிக்கிழமை வசூலை விட கம்மியாகும். அதேவேளையில் இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தமிழ்நாட்டில் வெறும் 235 தியேட்டர்களில் தான் திரையிடப்பட்டு உள்ளது. அதில் நேற்று மட்டும் மொத்தம் 1633 காட்சிகள் போடப்பட்டு இருந்தன. இதன் மூலம் 5.77 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்து உள்ளது காந்தாரா திரைப்படம்.
