மத்தியப் பிரதேசத்தில் இறந்த 9 குழந்தைகளில், 5 குழந்தைகள் கோல்ரெஃப் என்ற சிரப்களை எடுத்துக் கொண்டதாகவும், 1 குழந்தைகள் நெக்ஸ்ட்ரோ சிரப்பை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருமல் சிரப்களை தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, தற்போது சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட 1,420 குழந்தைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப்களை வழங்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் சிரப் பரிந்துரைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எழுதிய கடிதத்தில், ‘2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்க வேண்டாம். பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி சிரப் பரிந்துரைக்கப்படுவதில்லை. இருப்பினும். மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இறப்புகளுக்கு காரணமான இருமல் சிரப்களில் மாதிரிகளில் எந்த மாசுபாடும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரப்களில் கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறியப்படும் டைதிலீன் கிளைக்கால் (DEG) அல்லது எத்திலீன் கிளைக்கால் (EG) இரசாயனங்கள் இல்லை என்பதை சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
