பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை நியமிப்பதில் ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வந்த குளறுபடிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆன பிறகும் அதை செயல்படுத்துவதில் நடக்கும் குழப்பங்களைப் பார்க்கும் போது கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? என்ற ஐயம் எழுகிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசு கடைபிடிக்கும் அமைதி கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு காவல்துறைக்கு 621 சார் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் அத்துடன் சேர்த்து தீயவிப்புத்துறைக்கு 129 நிலைய அதிகாரிகளை தேர்ந்தெடுக்கவும் ஆணையிடப்பட்டது.இரு பணிகளுக்கும் தேர்ந்தடுக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால்,
அதில் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்யும்படி ஆணையிட்டது.
