பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபை பதவிக்காலம் வரும் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதை அடுத்து அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதி என இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகாபந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆட்சி அமைக்க குறைந்தது 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன. குறிப்பாக நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 102 இடங்களிலும், பா.ஜ.க 101 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. இதற்கு பா.ஜ.க மறுப்பு தெரிவிப்பதால் கூட்டணி கட்சிகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
