தமிழ்நாட்டில் அமீபா வைரஸ் காய்ச்சலால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என சமீபத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்தார். கேரளாவில் அமீபா வைரஸ் பரவிவருகிறது. அதனால் தமிழக மக்களும் கவனத்துடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கை செய்துள்ளார். அமீபா வைரஸ் காய்ச்சல் என்றால் என்ன? இது எப்படி பரவுகிறது? இக்காய்ச்சல் வருவது எப்படி? இதனை தடுக்க என்ன வழி? இந்நோயை குணப்படுத்த மருந்துகள் உள்ளனவா என்பது குறித்து பிரபல மருத்துவர் ரம்யா அய்யாதுரை அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்.
அமீபா சுயமாக வாழக்கூடிய நுண்ணுயிர் ஆகும். இந்த நுண்ணுயிர் மனிதர்களில் மூளை தொற்று காய்ச்சல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனாலயே அமீபா வைரஸ் உருவாக்கும் காய்ச்சல் மூளையை பாதிக்கும் என்பதால் அமீபா மூளை காய்ச்சல் என கூறப்படுகிறது.
அமீபா நன்னீர் தேக்கங்களான ஏரி, குளம் மற்றும் தேங்கிய நதி நீரில் வசிக்கின்றன. அதாவது ஆறுபோல் ஓடாமல் ஒரேயிடத்தில் தேங்கி நிற்கும் நன்னீரில் அமீபா வைரஸ்கள் அதிகளவு இருக்கும். இந்த நீரில் மனிதர்கள் குளிக்கும் போது, தலை முக்கி குளித்து எழும்போது அந்த தண்ணீர் நமது மூக்கு நாசி வழியாக மூளையை அடைகிறது. அது மூளை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. இப்படித்தான் அக்காய்ச்சல் மனிதர்களுக்கு வருகிறது.
