பல்கலைக்கழக மானியக் குழுவின் 2015-ம் ஆண்டு விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் முறையான கமிட்டி ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் எனநேற்று மாலை மாணவர் சங்கத்தினர் திரண்டு வந்து துணைவேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனிக் கமிட்டி அமைக்க வேண்டும் எனவும் மாணவிகளின் குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாத துணைவேந்தர் மற்றும் புகாருக்குள்ளான பேராசிரியர்களைப் பணி நீக்கம் செய்யக் கோரியும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய இந்தப் போராட்டத்தால் துணைவேந்தர் உட்படப் பல நிர்வாகிகளும் பேராசிரியர்களும் அலுவலகத்திலேயே சிறைபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும், அதன் காரைக்கால் வளாகத்திலும் மாணவிகள் அளித்த பாலியல் புகார்களை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தினர் இந்த விவகாரத்தில் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகளின் புகார்களைப் புறக்கணித்த துணைவேந்தர் மற்றும் காரைக்கால் வளாகத் தலைவர் ஆகியோரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
