
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியிருக்கிறார்.
அவரோடு அவரது ஆதரவாளர்களையும் கூண்டோடு நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘‘அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதற்காக கருத்துக்களை வெளியிட்டேன். தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரிந்தவர்களை இணைக்க வலியுறுத்தினேன். அதை ஏற்றுக் கொள்ளாமல் என்னை பொறுப்புகளில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். கட்சி பொறுப்புகளில் இருந்து என்னை நீக்கியதால் வேதனை இல்லை. இதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதய தெய்வம் புரட்சித்தலைவர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழியில் அதிமுக மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று நோக்கத்தோடு, தொண்டர்களுடைய உணர்வுகள், மக்களுடைய எதிர்பார்ப்பை பிரதிபலிக்கின்ற வகையில் நேற்றைய தினம் அந்த விளக்கத்தை நான் வெளிப்படையாக தெரிவித்தேன். அதற்கு இன்று கழகத்திலிருந்து என் கட்சி பொறுப்புகளை விடுவித்து இருகிறார்கள். பொதுவாக ஜனநாயகப்படி கட்சியில் இருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அப்படி விளக்கம் கேட்காமலேயே என்னை நீக்கி இருக்கிறார்கள்.