
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘‘எழுச்சிப் பயணத்தில் இதுவரை தமிழகத்தில் 139 சட்டமன்றத் தொகுதிகளில் பயணித்துவிட்டு, 140வது தொகுதியாக தொண்டாமுத்தூர் வந்திருக்கிறேன். இதுவரை எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு மிகப்பெரிய கூட்டம். தொண்டாமுத்தூர் என்றைக்குமே அண்ணா திமுகவின் கோட்டை.
நேரமின்மை காரணமாக மரியாதைக்குரிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அவர்களால் இங்கு பேசமுடியவில்லை. நாட்டை ஆளக்கூடிய பாஜகவின் தேசியப் பொறுப்பில் இருப்பவர் நம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது நமக்குப் பெருமை.
வேலுமணிக்கு எப்போதுமே தொகுதியின் ஞாபகம் மட்டும்தான் இருக்கும், தொகுதி மக்கள் பற்றி பேசிவிட்டுத்தான் மற்ற விஷயங்களைப் பேசுவார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது நீங்கள், அதனால்தான் பல்வேறு திட்டங்களை இங்கு கொண்டுவர முடிந்தது. நல்ல குணம் படைத்த வேலுமணி, காரியத்தில் கண்ணாக இருப்பார்.
வேலுமணி ஒரு தகவல் கூறினார். அதாவது, மண் அள்ளும் விவசாயிகள் மீது வழக்கு, ஃபைன் போட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தடையின்றி வண்டல் மண் அள்ளிக்கொள்ளலாம். நாங்கள் முறையாகக் கொடுத்தோம், இன்று ஒரு லோடு மண் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள்.
இந்த பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இரண்டாம் கட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வேலுமணி கோரிக்கை வைத்தார். விரிவான திட்ட அறிக்கை தயாரித்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த திட்டத்தை திமுக கைவிட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இரண்டாம் கட்டத் திட்டம் நிறைவேற்றப்படும். குடிநீர் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும்.
நான் நேற்று முன் தினம் திண்டுக்கல்லில் புளி விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். புளியின் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று சொல்லி நியாயமான விலை வேண்டும் என்று சொன்னார்கள். இரண்டு வகை புளிகளைக் காட்டினர். விவசாயிகள் தங்கள் பிரச்னைகள் சந்தித்தனர். இன்றைக்கு ஒரு அமைச்சர், மாரத்தான் ஓடும் அமைச்சர் அந்த விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார். கிண்டல், கேலி செய்கிறார், யார் அந்த சார்?
ஒட்டன்சத்திரம் எழுச்சிப்பயணத்தில் முருங்கை விவசாயிகள் சந்தித்தனர். நான் அவர்களுடன் விவாதித்ததையும் கிண்டல் செய்கிறார். அதில் ரகம் இருக்கிறது, எவ்வளவு நாளில் விளைச்சல் கொடுக்கும் என்பது விவசாயிக்குத்தான் தெரியும். மாரத்தான் அமைச்சருக்கு தெரியுமா? இதற்கெல்லாம் அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுக்கு தகுந்த பதிலடி கொடுங்கள்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்பியும் மகாராஷ்ட்ரா ஆளுநராகவும் இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்திருக்கிறது. தொண்டாமுத்தூர் என்றாலே ராசியான இடம் என்பதற்கு இதுவே சாட்சி. நாம் பேசி முடிக்கும்போது நல்ல செய்தி வந்திருக்கிறது, இதேபோல் அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் ஆட்சி அமைப்போம்’’ எனத் தெரிவித்தார்