
‘‘ஸ்டாலினாவது கொஞ்ச நஞ்சமாவது கஷ்டப்பட்டாரா? மகன் உதயநிதி கஷ்டப்பட்டாரா? போராட்டம் பண்ணினாரா…? சிறை சென்றாரா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பது தவிர்த்து உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இன்று கிணத்துக்கடவு தொகுதியில் பேசிய அவர், “அதிமுக மக்கள் கட்சி, திமுக கருணாநிதி குடும்பத்தின் கட்சி. அதிமுகவில் உழைப்பவர்கள், தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்புக்கு வரமுடியும். திமுகவில் அப்படி வரமுடியுமா? கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்து இப்போது இன்பநிதியாம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். அதிமுகவில் சாதாரண நபர்கூட முதல்வராகலாம். திமுகவில் இப்படி ஸ்டாலின் சொல்ல முடியுமா?
அதிமுக பலம் வாய்ந்த கட்சி. அதிமுக பாஜக கூட்டணி அமைந்தவுடன் திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அம்மா மறைந்தபோது பிரச்னை வெடித்தது. எம்.எல்.ஏக்கள் வாய்ப்புக்கொடுத்து முதல்வர் ஆக்கினார்கள். அப்போது ஸ்டாலின், ஒரு வாரம் முதல்வராக இருக்க முடியாது, ஒரு மாதம் முதல்வராக இருக்க முடியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் 2 மாதம் ஆட்சியில் இருந்தேன். அது, பொற்கால ஆட்சியாக இருந்தது.
திமுகவின் 52 மாத ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல்தான். திமுக ஊழலின் ஊற்றுக்கண். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. ஆனால், அதிமுக மக்களுக்காக எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி. அம்மா அவர்களும் அற்புதமான ஆட்சி கொடுத்தார். 31 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மதம், ஜாதி என்று யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததைப் பற்றியே பேசுகிறார்கள். ஏன் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா? எங்களைப் பொறுத்தவரை மக்கள் தான் நீதிபதி. 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர்.
என் பஸ்ஸை சுந்த்ரா டிராவல்ஸ் என்றார் ஸ்டாலின். உங்களைப் போல ஹெலிகாப்டரிலா போக முடியும்.? ஏழை நடுத்தர மக்களை பார்க்க வேண்டும் என்றால் இந்த பஸ்ஸில் தான் வரமுடியும். விமானத்தில் வந்து பார்க்க முடியுமா? கிண்டல் கேலி பேசுகிறார். மக்களை நேரில் சந்தித்து புகாரை கேட்டு தேர்தலில் வென்று மக்களுக்கு நன்மை செய்வதுதான் எங்கள் எண்ணம். ஸ்டாலின் என்ன உழைத்து முதல்வரானாரா..? அவங்க அப்பா முதல்வர், தலைவர், அவர் மூலம் தான் நீங்க வந்தீங்க. இங்கே வந்து நின்றால்தான் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பார்க்கப் போவதற்கே கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து பொதுச்செயலாளர், முதல்வர் ஆகியிருக்கிறேன். உழைக்காத உங்களுக்கே இவ்வளவு தில்லு இருந்தால், உழைச்சு வந்த எங்களுக்கு எப்படியிருக்கும்..?
மக்கள் பிரச்னையை நான் நன்றாக உணர்ந்தவன், கஷ்டம் தெரியும். ஸ்டாலின் போல ராஜ வாழ்க்கை வாழவில்லை. எம்ஜிஆர் ஏழைகளுக்காகவே கட்சியைத் தொடங்கினார், அம்மா கட்டிக்காத்தார். மக்களுக்காக வாழ்ந்தவர்கள் நம் தலைவர்கள். எம்ஜிஆர், அம்மாவுக்கு மக்கள் தான் வாரிசு. வாரிசுக்கு என்ன செய்யவேண்டுமோ அதை மக்களுக்கு செய்தார்கள் நம் தலைவர்கள். ஆனால் கருணாநிதி குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செஞ்சார். இதுதான் வித்தியாசம். ஸ்டாலின் அவர்களே கிண்டல் கேலி பேசுவதை விட்டுவிடுங்கள். உங்கள் மகனை கொண்டுவரத் துடிக்கிறீர்கள், அது நடக்காது.
ஸ்டாலினாவது கொஞ்ச நஞ்சமாவது கஷ்டப்பட்டாரா? மகன் உதயநிதி கஷ்டப்பட்டாரா? போராட்டம் பண்ணினாரா…? சிறை சென்றாரா? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பது தவிர்த்து உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது? ஒரு உழைப்பும் இல்லாமல் துணை முதல்வர் ஆக்கிட்டாங்க. திமுகவில் எத்தனை பேர் கஷ்டப்பட்டு ஓடாகத் தேய்ந்துள்ளனர், அவர்களை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதிமுக உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் கட்சி.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. போதை விற்பனை அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் அடிமையாகி அழிவுப்பாதையில் செல்கிறது. சட்டமன்றத்தில் பலமுறை சொல்லிப்பார்த்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது சொல்கிறார். எல்லோரும் சீரழிந்த பின்னர் தான் முதல்வருக்கு ஞானோதயம் வந்து சொல்கிறார்.
இன்றைக்குக் கூட போதை ஆசாமி விருதாச்சலத்தில் ரோட்டில் செல்பவரை வெட்டுகிறான். சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. இந்த ஆட்சி இருக்கும் வரை அவரவர் குடும்பத்தை அவரவர் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே சூப்பர் முதல்வராம். எதில் என்றால் கடன் வாங்குவதில். அதிக கடன் வாங்கியது தமிழ்நாடு. வரிபோட்டு நீங்கள் தான் கட்டணும். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகால கடன் சுமை அதிகம். நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். தமிழகம் மோசமான நிதி நிலையில் உள்ளது.
அதிமுக ஆட்சியில் கொரோனாவில் அரசுக்கு வருவாய் இல்லை. அப்போதுகூட விலைவாசி உயரவில்லை, 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். சிறப்பான ஆட்சி கொடுத்தோம். திமுகவில் நல்ல வருமானம் வருகிறது. 1 லட்சத்து 35ஆயிரம் கூடுதலாக வருவாய் வந்திருக்கிறது. எதுக்கு கடன் வாங்கினார்கள்..? என்ன திட்டம் கொண்டுவந்தார்கள்..? என கேள்வி எழுப்பினார்.