
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அண்ணாமலை பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆளும் திமுகவை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்து வந்தவர் அண்ணாமலை. திமுக அமைச்சர்களின் மீது ஊழல் பட்டியல் ஒன்றை ஆளுநர் கொடுத்தது வரை அவர் திமுகவுக்கு எதிராக பேசிய பேச்சுக்கள் ஏராளம். தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக மீது குற்றம் சுமத்தியதால் பாஜக தமிழகத்தில் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் வளர்ந்து வந்தது. தற்போது அவர் பதவியில் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவர் கோவையில் பேசிய பேசிய பேச்சு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
‘‘மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றும், விஜய் இரண்டாவது இடத்தை பிடிக்கலாம்’’ என்றும் அவர் பேசியிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்ணாமலையின் இந்த பேச்சு தற்போது டெல்லி மேலிடம் வரை பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
‘‘பாஜகவில் தற்போது நடக்கும் செயல்கள் எனக்கு திருப்தியாக இல்லை. தொடர்ந்து குழப்பங்கள் நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியை விட்டு விலக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் இலக்கு. அதற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். அதற்கு ஏற்ப திட்டம் வகுக்கப்பட்டது. பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அப்படி போட்டியிட்டால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் வலிமை பாஜகவுக்கு இல்லை. அதனால் தான் கூட்டணி அமைக்கப்பட்டது. பாஜகவால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. எனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
அதிமுகவினருக்கும் எனக்கும் உரசல் இருந்தது. எனினும் நான் செய்தது எல்லாம் பாஜகவின் வளர்ச்சிக்காக மட்டும்தான். மற்றவர்களை அவமதிக்கும் நோக்கத்தில் நான் பேசவில்லை. எனது கட்சிக்காக மட்டுமே நான் பேசினேன். அதிமுகவினர் என்னை விமர்சனம் செய்த போது நானும் பதிலுக்கு விமர்சனம் செய்தேன். ஊழல் பற்றி என்னவெல்லாம் நடைபெற்றது என்றும் பேசிதான் ஆகவேண்டும். அப்போது கூட நான் முதல்வர் ஜெயலலிதா பெயரை குறிப்பிடவில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொருத்தவரையில தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஒரு பிரதான போட்டியாளராகவே எனக்கு தெரிகிறார். இளைய தலைமுறை வாக்காளர்களை அவர் வசப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் 40 வயது உட்பட்ட வாக்காளர்கள் மட்டும் இரண்டு கோடியே 28 லட்சம் பேர் இருக்கிறார்கள். பொதுவாக தமிழகத்தில் புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு 8 முதல் 12 சதவீதம் வாக்குகள் வரை கிடைக்கும். அந்த வாக்குகள் விஜய்க்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
திமுக- அதிமுக இரு கூட்டணி கட்சிகளுக்கு இடையே 20 முதல் 22 சதவீத வாக்குகள் உள்ளன. இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையை வைத்து பார்த்தால் திமுக மிக வலிமையாக இருக்கிறது. திடமான கூட்டணியாக திமுக கூட்டணி பார்க்கப்படுகிறது. எனக்கு தெரிந்து 40 சதவீதத்திற்கும் மேல் திமுக முகவுக்கு வாக்கு சதவீதம் இருக்கிறது. தமிழ்நாட்டில மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிதாக தெரியவில்லை. ஒருவேளை தற்போது வேண்டுமானால் உருவாகலாம்’’ என்று பேசி இருந்தார்.
அண்ணாமலை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அதிமுகவுடன் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என அண்ணாமலை பேசிய பேச்சு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து, ‘‘திமுகவை கடுமையாக வசை பாடியவர் அண்ணாமலை. அதே அண்ணாமலை இப்பொழுது மக்கள் மன்றத்தில் திமுக வலுவாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதுவே திமுகவின் வெற்றிதான்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்த ஆடியோ தகவல் டெல்லி பாஜக தலைமைக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ‘‘தமிழகத்தில் பாஜக கூட்டணியை குழப்புகிறார். அவர் திமுகவுக்கு தமிழ்நாட்டில் வலிமை அதிகமாக இருக்கிறது என்று பேசிய பேச்சு சரியானது அல்ல’’ என்கின்ற ரீதியில புகார் மனுவும் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்தப் பேச்சைக் கேட்ட அமித் ஷா கடும் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி செல்கிறார். அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை அவர் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைவர் பதவியை விட்டு விலகியதற்கு காரணம் அதிமுகதான். தன்னை பதவியை விட்டு தூக்கியபோதே அவர் பாஜக, அதிமுகவுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டார். அப்போது இருந்தே திமுக எதிர்ப்பை கைவிட்டு விட்டார். பாஜக இதேப் நிலையில் நீடித்தால் அவர் கட்சியை விட்டு விலகவும் தயாராகவே இருக்கிறார். அவரது ஒரே எண்ணம் தனது பதவி பறிபோக காரணமாக இருணந் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகி விட்டார்’’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.