பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணி நியமனங்களிலும் கூட ரூ.35 லட்சம் வரை கையூட்டு வசூலிக்கப்படுகிறது என்றால் தமிழக ஆட்சியாளர்களுக்கு மனசாட்சியே இல்லை என்று தான் பொருள். திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது.
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு அரசு மாற்ற வேண்டும்.
பாஜக அண்ணாமலை அறிக்கை:
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் 2,538 பணியிடங்கள் “பணம் கொடுத்து வேலை வாங்கும்” மோசடியில் சிக்கியுள்ளன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக ED தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஊழலின் அடையாளமாகி விட்டது. தகுதியும் உழைப்பும் கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரூ.35 லட்சம் கொடுக்க முடியாததால் வேலை வாய்ப்பை இழந்தனர். திமுக அரசின் பேராசை அவர்கள் கனவுகளையும் எதிர்காலத்தையும் நசித்தது.
தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு விற்கப்பட்ட இந்த பெரும் ஊழலுக்கு நீதிமன்ற மேற்பார்வையிலான முழுமையான CBI விசாரணை அவசியம்.
