ரஷ்யா-உக்ரைனில் நடந்து வரும் போருக்கு இடையே இந்திய இளைஞர்கள் இருவர் ரஷ்ய ராணுவத்தில் மோசடியாக சேர்க்கப்பட்டு போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், குறைந்த பட்சம் 13 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகவும், இந்த விஷயத்தில் ரஷ்யாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகமும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘‘எந்த சூழ்நிலையிலும் ரஷ்ய ராணுவத்தில் சேரும் வாய்ப்பை அங்குள்ள இந்திய இளைஞர்கள் ஏற்கக்கூடாது’’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவம் வழியாக உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியை சென்றடைந்த இரு இந்தியர்கள் ஜம்முவைச் சேர்ந்த 22 வயது சுமித் சர்மா, பஞ்சாபைச் சேர்ந்த குர்சேவக் சிங். மாஸ்கோ மாநில மொழியியல் பல்கலைக்கழகத்தில் மொழிப் படிப்பைத் தொடர்ந்து வந்த சுமித் சர்மா, கூடுதல் பணம் சம்பாதிக்க பகுதிநேர வேலை தேடத் தொடங்கியுள்ளார். ஒரு பெண் ஏஜெண்ட் அவருக்கு கட்டுமானப் பணியை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் பின்னர் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நேரடியாக ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எந்தவொரு இராணுவப் பயிற்சியும் இல்லாமல், ஆகஸ்ட் 2024-ல் அவர் உக்ரைனின் செலிடோவ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார். ‘‘இது வெறும் வேலை என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. இப்போது நாங்கள் கண்காணிக்கப்படுகிறோம், நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல தோழர்கள் காணாமல் போயுள்ளனர். சிலர் போரில் கொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். அவர்கள் இங்கிருந்து அழைத்துச் செல்லப்பட வேண்டும்’’ என்று சர்மா முறையிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த வலையில் சுமார் 15 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக சர்மா தெரிவித்துள்ளார். அவர்களில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். தங்களுடன் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு இளைஞர், பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டதாகவும், கடந்த நான்கு நாட்களாக அவர் தொடர்பில் இல்லை என்றும் குருசேவக் சிங் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2024-ல், ரஷ்ய தூதரகம் இந்தியர்கள் இனி இராணுவத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. முன்னதாக ஜூலை 2024-ல், ரஷ்யாவில் அதிபர் புடினுடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.
தற்போது, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும், ரஷ்யாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பல முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்த வகையான வேலையாலும் தூண்டப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் சேர வேண்டாம் என்று தெளிவான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். சந்தேகத்திற்கிடமான சலுகைகளில் இருந்து விலகி இருக்குமாறு அமைச்சகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
