தவெக தலைவர் விஜய்யை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் அதிமுகவின் இந்த நடவடிக்கை காலம் தாழ்ந்த ஒன்றாகவும், கரூர் விவகாரத்தின் போதே விஜய்யை விமர்சித்திருந்தால், அது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் என்று பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும், தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று தீர்மானம் போடப்பட்டது. இதன் மூலமாக அதிமுக – தவெக கூட்டணி அமைய வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின், விஜய்யை கடுமையாக சாட தொடங்கி இருக்கின்றனர் அதிமுகவின் முக்கிய தலைகள்.
எடப்பாடி பழனிசாமியின் முக்கிய ஆதரவாளரான கேபி முனுசாமி நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், சினிமாவில் நடித்த புகழை வைத்துக் கொண்டு தங்களை முதன்மைபடுத்துகின்றனர். ஏதோ பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல் முதன்மைப்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் உருவாகிய உள்ள புதிய கட்சிகள் மாய பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விஜய்யை மறைமுகமாக சாடினார்.
இன்று நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், 10 படங்கள் ஓடினாலே முதல்வராகிவிடலாம் என்று எண்ணுகின்றனர். விஜய் இன்னும் பயிற்சி பெற வேண்டும் என்று விமர்சித்துள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் விஜய்யை சாடி வருவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனென்றால் இதுவரை விஜய்யை திமுக மற்றும் நாதக மட்டுமே கடுமையாக சாடி வந்தது.
தற்போது தவெக அதிமுகவின் விமர்சனங்களையும் சமாளிக்க வேண்டிய தேவை எழுந்தது. இதுகுறித்து பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், தவெகவை கூட்டணிக்கு அதிமுக அழைத்து வந்தது. ஆனால் தவெக பொதுக்குழுவுக்கு பின் அதிமுகவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. இந்த நிலைப்பாட்டை அதிமுக முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும்.
கரூர் விவகாரத்தில் விஜய் கேட்காமலேயே அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. சட்டசபையிலும் அதிமுகவின் குரலாக பேசி இருந்தது. அதனால் இயல்பாகவே விஜய் மீது எழுந்திருக்க வேண்டிய எதிர்ப்பை, அதிமுக மட்டுப்படுத்திவிட்டது. அப்போதே விஜய்யை பலவீனமாக்கி இருக்க வேண்டும். ஆனால் கூட்டணிக்கு வருவார் என்று நம்பி மென்போக்கை கடைபிடித்தனர்.
இதனால் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இருந்து மீள்வதற்காக அதிமுகவினர் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய்யை விட அதிமுக அறுவடை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் அதிமுகவின் விமர்சனம் கால தாமதமானது. கரூர் விவகாரத்திலேயே விஜய்யை விமர்சித்திருந்தால், அவர் பலவீனமாக உணர்ந்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
