அமித்ஷா ஆட்ட நாயகனாக இருக்கலாம் ஆனால் ஆடுகளமும், அணியும் பீகாரில் சரியாக அமைந்தது தமிழகத்திலும் அதுபோன்று ஆடுகளமும், அணியும் சரியாக அமையுமா?
சமுதாய ரீதியிலான ஒருங்கிணைப்பை NDA பீகாரில் மேற்கொண்டது ஆனால் எடப்பாடி பழனிசாமி பல சமுதாயங்களுக்கு விரோதியாக பார்க்கப்படுகிறார், குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் பெரிய மனக்குமுறல் உள்ளது. 10.5% வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக மற்ற சமுதாயங்கள் உணர்கிறார்கள். பிராமணர்களுக்கு எதிரான கட்சியாக சித்தரிக்கப்படுகிற திமுகவிலும் கூட தற்பொழுது பிராமணர்களுக்கு பதவி கொடுக்கிறார்கள்.
பீகாரில் பெரிய சமுதாயங்கள் மட்டுமல்ல சிறு சிறு சமுதாயங்களை கூட ஒருங்கிணைத்தார்கள். ஆனால் எடப்பாடியால் அதிமுக என்ற கட்சியில் கவுண்டர், வன்னியர் மற்றும் முக்குலத்தோர் என்கிற மூன்று பெரும் சாதிகளை மட்டுமே முன்னிலைப்படுத்துவது போலவும் மற்ற சமுதாயங்களை புறக்கணிக்கப்படுவதாகவும் உணர்கிறார்கள்.
கொங்கு மண்டலத்திலும் தன் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வெளிப்படையாக சாதி அரசியலை முன்னெடுக்கிறார், அது மற்ற சமுதாய மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி மேல் ஒரு கசப்பு உணர்வு ஏற்படுகிறது. பாரம்பரியமான அதிமுகவுக்கு அடித்தளமே பட்டியலினத்தவர்கள் வாக்கு தான். அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி அது தற்போது எம்.ஜி.ஆரையும் அவரோடு பயணித்தவர்களையும் புறக்கணித்ததால் இன்று சிதறுண்டுவிட்டது. எனவே இந்த சமுதாய கணக்குகளை தமிழகத்தில் எடப்பாடியை முன்னிறுத்தி சாத்தியப்படுத்துவது கடினம்.
அதிமுகவில் அம்மா மறைவுக்கு பிறகு 100க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள், விளக்கப்பட்டிருக்கிறார்கள், புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக அன்றைய வலிமையோடு இன்று இல்லை என்ற தோற்றம், 45% வாக்கு வங்கி 25% ஆக குறைந்துள்ளது. அதனால் தான் கே.சி.பி போன்றவர்கள் ஒருங்கிணைப்பு முயற்சியை எடுத்தார்கள், ஆனால் EPS மட்டுமே அதற்கு எதிராக உள்ளார். சிராக் பஸ்வான் எப்படி NDAவில் இணைக்கப்பட்டாரோ அதுபோல அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று EPS உணரவேண்டும்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் அதிமுகவின் செயல்பாடுகள் பலமாக இல்லை, ஒரு சிறு கருத்து சொன்னதற்காக கே.சி.பியை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி அதனால், மற்றவர்கள் கருத்து சொல்ல தயங்குகிறார்கள். பூத் கமிட்டிகளிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். எடப்பாடி தனக்கென புதிய அணியை உருவாக்குகிறார் அதில் தவறில்லை ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.
பீகாரை போல மோடி அவர்களையும், பாஜகவையும் இன்னும் தமிழக மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை, கூட்டணி அமைச்சரவைக்கு பீகார் பழக்கப்பட்ட மாநிலம், தமிழகம் அதை ஏற்றுக்கொள்ளாத மாநிலம். அதேபோல் நிதிஷ் குமார் தற்பொழுதும் முதலமைச்சராக பொறுப்பேற்றால் 10வது முறையாக பொறுப்பேற்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் முதலமைச்சராகவும் பல கூட்டணி அரசாங்கங்களில் தன் கட்சிக்கு குறைவான MLAக்கள் இருந்தாலும் ஒரு நல்ல முதலமைச்சர் என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். குறிப்பாக எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், சாதிய சார்பு நிலைக்கும் ஆளானவர் அல்ல. ஆனால் தமிழகத்தில் எடப்பாடி என்றாலே நம்பிக்கைக்குரியவர் அல்ல, யாரையும் காலை வாரக்கூடியவர் என்பதும், சாதிய அரசியல் செய்யக்கூடியவர் என்பது, ஊழலுக்கு உறுதுணை புரிந்தவர் என்பதாக தான் அவரது பிம்பம் இருக்கிறது.
பீகாரில் நிதிஷ் குமார் அரசாங்கம் இருந்தது, அதனால் அவர்கள் மத்திய அரசின் உதவியுடன் பல திட்டங்கள் குறிப்பாக, பெண்களுக்கு தொழில் துவங்க 10,000 ரூபாய் கொடுக்கிறோம் என்று அறிவிக்க முடிந்தது. ஆனால் தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. இங்கு அதை செய்யமுடியாது. ஒருவேளை பீகார் தேர்தல் முடிவை பார்த்துவிட்டு ஒரு கோடி ரேஷன் அட்டை உள்ள பெண்களுக்கு தொழில் துவங்க 25000 ரூபாய் கொடுக்கிறோம் என்று திமுக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பீகாரில் பிரசாந்த் கிஷோரை பெரிய சக்தியாக NDA கூட்டணி பார்க்கவில்லை, ஆனால் எடப்பாடி பிள்ளையார் சுழி போட்டு விஜய்யை வளர்த்துவிட்டுவிட்டார், விஜய்யை நம்பித்தான் தான் உள்ளதாக வெளிக்காட்டிவிட்டார். அதேபோல உதயகுமார் போன்ற முன்னாள் அமைச்சர்களும் அதே தவறை தான் செய்தார்கள். அதற்கு தான் கே.சி.பி போன்றவர்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாதீர்கள், சொந்தக் கட்சியை ஒருங்கிணையுங்கள் என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை கேட்காமல் அதிமுக தொண்டர்களிடம் விஜய் கூட்டணிக்கு வந்தால் மட்டும் தான் வெற்றிபெற முடியும் என்ற தோற்றத்தை இவரே ஏற்படுத்திவிட்டார்.
அப்படி விஜய் கூட்டணிக்கு வரவேண்டும் என்றால் பாஜக இருக்கும் அணியில் அவர் சேரமாட்டார். ஆனால் எடப்பாடியை முதல்வராக விஜய் ஏற்றுக்கொண்டால் பாஜகவை கழட்டி விட்டுவிட்டு விஜய்யுடன் அணி சேருவதற்கு கூட எடப்பாடி தயங்க மாட்டார்.
அதேபோல கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்கிற பண்பு தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கிற எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. குறிப்பாக தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகளே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
புரட்சித்தலைவர் மற்றும் அம்மா காலத்தில் இருந்த பெண்கள் வாக்கு வங்கி தற்போது முழுமையாக அதிமுக வசம் இல்லை, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், இலவச பேருந்து என்று பெண்கள் வாக்கு வங்கியை திமுக அபகரிக்க பார்க்கிறது, அதை தக்கவைத்துக்கொள்ளுகிற நடவடிக்கைகள் எடப்பாடி தரப்பில் பெரிதாக எதுவும் எடுக்கப்படவில்லை.
பீகாரில் சென்ற தேர்தலில் பெற்ற அதே வாக்கு சதவீதத்தை தான் இந்த முறையும் INDIA கூட்டணி பெற்றிருக்கிறது, ஆனால் இந்த முறை சென்ற தேர்தலை விட அதிக வாக்கு சதவீதம் பதிவாகியிருக்கிறது. அப்படி அதிகரித்த வாக்கு சதவீதம் NDA க்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே அதிகமாக தான் வாக்கு பதிவாகியுள்ளது. புதிய வாக்காளர்கள் பெரும்பாலும் எடப்பாடிக்கு ஆதரவாக இல்லை என்பதையும் உணரவேண்டும். அதனால் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கி களத்தை தயார் செய்தால் பீகார் போல ஒரு மாபெரும் வெற்றி தமிழகத்திலும் சாத்தியமே. இதற்கு ஒத்துழைப்பாரா எடப்பாடி?
