அதிமுகவின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்களை மீண்டும் இணைக்க 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சி பதவிகளிலிருந்து நீக்கினார் செங்கோட்டையன் ஏற்கனவே டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுக நிலவரம் குறித்துப் பேசியிருந்தார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். அவரது டெல்லி பயணம் அதிமுகவின் உட்கட்சி விவராகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான்.
அதிமுகவை உடைக்க வேண்டும் என செயல்பட்டவரை மன்னித்து துணை முதல்வர் பதவி வழங்கினோம்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்த்து கபளிகரம் செய்ய பார்த்தவர்களிடம் இருந்து காப்பாற்றியது பாஜகதான். நன்றி மறப்பது நன்றன்று. எனவே நன்றியோடு இருக்கிறோம். அதிமுகவை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரம் இருப்பதை விட தன்மானம் தான் முக்கியம். அதில் இம்மி அளவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 பேரை கடத்திச் சென்றவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா..? சிலர் கைக்கூலிகளை வைத்துக் கொண்டு திட்டம் போடுகிறார்கள். அவர்களுக்கு முடிவுகட்டப்படும்.
என்னை யாராலும் மிரட்ட முடியாது. கட்சிக்காக உழைக்கிறவங்கள தான் அனுசரிச்சு போக முடியும். சில பேரு அதிமுகவ அடமானம் வைக்க பாக்குறாங்க. அதிலிருந்து காப்பாத்த அனைவரும் துணிந்து நிக்கணும். அதிமுகவுக்கு துரோகம் செய்றவங்க நடு ரோட்டில நிப்பாங்க. தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா. அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்’’ என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
