இன்று இரவு அமித்ஷாவை சந்தித்துப்பேச உள்ள எடப்பாடி பழனிசாமி முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுகவின் பலனே முக்குத்தோர் வாக்குகள் என ஜெயலலிதா நம்பினார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் வகுப்பை சேர்ந்த சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை ஒதுக்கி வைத்தார். அப்போது முதல் எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி மீது முக்குலத்தோருக்கு ஏற்பட்ட அதிருப்தியே காரணம் எனக் கூறப்பட்டது, அதாவது அதிமுகவில் முக்குலத்தோரை ஓரம் கட்டுவதாக அந்த சமூக மக்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு செல்லும்போது எதிர்ப்புகாட்டப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி வன்னியருக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவித்ததும் இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் முக்குலத்தோரை ஒதுக்கி வருவதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்படுகிறது. அவர் கவுண்டர்- முக்குலத்தோர் எனப்பிரித்து வேற்றுமை பார்ப்பதாகவும் அதிருப்தி நிலவுகிறது.
முக்குலத்தோர் முகங்களான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தும் எடப்பாடி பழனிசாமி அதை சட்டை செய்யவில்லை. சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகிய, விலக்கி வைக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என பத்து நாள் கெடுவிடுத்தார். இதனால் விரக்தியான எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். நேற்று பேசிய அவர், கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் இணைக்க மாட்டேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் முக்குலத்தோர் வகுப்பில் உள்ள தலைவர்கள் வேண்டாம், தொண்டர்கள் வேண்டும் என நினைக்கும் எடப்பாடி பழனிசாமி அந்த சமூகத்தினரின் வாக்குகளை பெற பிரயத்தனப்படுகிறார். 2026 தேர்தலை முன்னிட்டு அவர்களை வளைக்கக புதிய உத்தியை தேர்ந்தெடுத்துள்ளார். மதுரையில் சுற்றுப்பயணம் செய்த அவர், மதுரை விமான நிலையத்திற்கு “பசும்பொன் முத்துராமலிங்க தேவர்” பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இது 30 ஆண்டுகளாக அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக வைத்து வரும் கோரிக்கைதான். இதற்கு பட்டியலின தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், ஏனென்றால் இது சாதி அடிப்படையிலானது என விமர்சிக்கின்றனர். இதற்கு டிடிவி தினகரன் சாதியால் வேற்றுமைப்படுத்துகிறார் என எதிர்ப்புத் தெரிவித்தார்.காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதை “சந்தர்ப்பவாத அரசியல்” என விமர்சித்தார்.
அத்தோடு நிற்கவில்லை எடப்பாடி பழனிசாமி, தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக அரசிடம் வலியுறுத்துவதாக திண்டுக்கல் பரப்புரையில் அறிவித்தார். எடப்பாடியாருக்கு தேவர் மீது வந்த திடீர் மரியாதை அதிமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் உத்தி என விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று அமித் ஷாவை சந்திக்க இருக்கும் எடப்பாடி பழனிசாமி தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை விடுப்பார் எனக்கூறப்படுகிறது, அவர் அமித் ஷாவை சந்திக்கச் செல்லும் முன் இதனை தகவலாகச் சொல்லி முக்குலத்தோரை கவர முயற்சிக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் முன்பு முக்குலதோர் சமூகம் அக்கட்சியின் 30-40% ஆதரவை அதிமுகவுக்கு அளித்து வந்தனர். இந்த வாக்குகளை தக்க வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் உத்தி ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்ற முக்குலத்தை சேர்ந்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
