அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கெடுவிதித்த நிலையில் எந்த சலணமும் இன்றி செங்கோட்டையன் மௌனம் காத்து வருகிறார். இந்நிலையில் வழி தெரியாமல் மௌனம் காக்கிறாரா செங்கோட்டையன் என்ற கேள்வி எழுந்து வருகிறது.அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து திரும்பினார். ‘‘அதிமுகவில் பிரிந்து கிடக்கக்கூடிய ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்.
பிரிந்த சக்திகள் ஒன்றிணைந்தால்தான் அதிமுக பழைய வலிமை பெறும். இப்படி ஒருங்கிணைந்த அதிமுகவாக மாறினால்தான் நாம் வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது. அதனை இபிஎஸ் அதனை உடனே செய்ய வேண்டும். பத்து நாட்களுக்குள் அதனை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நானே அந்த பணியை தொடங்குவேன்’’ என அவர் கெடு விதித்தார். அவர் விதித்திருந்த கெடு செப்டம்பர் 14ஆம் தேதியோடு முடிந்துவிட்டது.
இன்றைக்கு தேதி 19. அவர் கெடு விதித்த தேதியை தாண்டி நான்கு நாட்கள் கடந்து விட்டது. ஆனால் செங்கோட்டையன் எந்தவிதமான பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தவில்லை. வெளியிலும் தலை காட்டவில்லை. தொடர்ந்து அமைதி காட்டி வருகிறார். ஏன் அமைதியாகிவிட்டார் செங்கோட்டையன்? அவர் வழி தெரியாமல் தவிக்கிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். செங்கோட்டையன் டெல்லி சென்று வந்த பிறகு சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வந்தார். எனவே எடப்பாடி பழனிச்சாமி டெல்லி விசிட்டின் மூலமாக செங்கோட்டையனின் கலகக் குறல் அடக்கப்பட்டு விட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஏற்கனவே செங்கோட்டையன் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். பிறகு மார்ச் மாதத்தில் அவர் டெல்லி சென்று அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், ‘‘ஆம், நான் மத்திய அமைச்சர்களை சந்தித்தேன் ’’ என வெளிப்படையாகவே தெரிவித்தார். அந்த சந்திப்பிற்கு பிறகும் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு பயணம் செய்திருந்தார். அதன் பிறகு தான் ஏப்ரல் பதிவிறக்கம் தேதி அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது. அந்தக் கூட்டணி உறுதியானவுடன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக செங்கோட்டையன் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் ஒன்றிணைக்கும் கருத்துக்களை தெரிவித்த நிலையில் அவர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர்கிறார். அவர் தொடர்ந்து அமைதி காப்பதற்கு பின்னால் டெல்லி தலைவர்கள் ஏதேனும் சொல்லி அமைதி காக்க சொல்லி இருக்கிறார்களா? அல்லது இதற்கு மேல் பேசினால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் நீக்கப்பட்டு விடலாம் என்பதால் மௌனம் காக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் அவர் இன்று திமுகவில் இணைய உள்ளதாக அறிவாலய வட்டாரத்தினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ‘‘திராவிட முன்னேற்ற இயக்கத்திற்கு வருக வருக என வரவேற்கிறோம். இணைந்து இந்த இயக்கத்தை மற்றொரு நூற்றாண்டிற்கு கொண்டு செல்வோம். இன்று மாலை அண்ணா அறிவாலயம் நோக்கி’’ என செங்கோட்டையனை வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் திமுகவை சேர்ந்தவர்கள்.
இது உண்மையானால், தமிழக அரசியலில் பெரும் மாற்றமாகக் கருதப்படும். ஆனால், இது குறித்து இரு தரப்பிலும் எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு தமிழக சபாநாயகர் அப்பாவு, “செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்கிறோம். அது ஸ்டாலின் முடிவு” என்று கூறி ஊகங்களை தூண்டி இருந்தார். 2021-ல் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர். அவரது அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்.
குள்ளம்பாளையத்தில் பிறந்த செங்கோட்டையன் காங்கிரஸ் கோட்டையாக இருந்த சத்தியமங்கலம் தொகுதியில் 1977ல் அதிமுகவின் சாதாரண தொண்டனாகப் போட்டியிட்டு வென்று அரசியலுக்கு அறிமுகமானார். அதிமுகவின் 50 ஆண்டு கால தொண்டன். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நெருக்கமானவர். 9 முறை சட்டமன்ற உறுப்பினர். மீன்வளத்துறை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்தவர்.
