சுற்று பயண நிகழ்ச்சி நடத்துவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதோடு, மாற்று இடத்தை தேர்வு செய்ய சொல்லி வலியுறுத்துகின்றனர்.
கரூரில் வருகின்ற 25, 26ம் தேதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனுமதி கோரிய பகுதி தடை செய்யப்பட்ட இடம் என்பதால், மாற்று இடத்தை தேர்வு செய்ய வலியுறுத்தி போலீசார் இழுத்தடிப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர் வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சுவர் விளம்பரம் எழுதுவதற்கு இடையூறு செய்வதாக புகார் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் இரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, கரூரில் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சி நடத்துவதற்கு நகர் முழுவதும் சுவர் விளம்பரம் எழுதியதால், தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். இதையடுத்து போலீசாருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அதிமுகவினர் உரிய அனுமதி கோருவதற்கு சென்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம் ஆர் விஜயபாஸ்கர்,கரூரில் வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட அதிமுக சார்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சுவர் விளம்பரம் எழுதுவதற்கு இடையூறு செய்கின்றனர்.
மேலும், கரூர் மாவட்ட அதிமுக சார்பில் சுற்றுப்பயண நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்ட பகுதி தடை செய்யப்பட்ட இடம் என கூறி, காவல்துறை தரப்பில் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதோடு, மாற்று இடத்தை தேர்வு செய்ய சொல்லி வலியுறுத்துகின்றனர். ஆனால் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கூறப்பட்ட பேருந்து நிலையம் உண்டான பகுதியில் ஏற்கனவே தேர்தல் நேரத்தில் திமுக சார்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
அதை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து உரிய அனுமதி கேட்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பேச இருக்கிறோம் என்றார்.
