தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை கவிழ்ப்பதற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தை சேர்ந்த தியா கராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 5 பேர் இந்த வழக்கில் மிக முக்கியமான குற்றவாளிகளாக கருதப்பட்டனர். அவர்கள் 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை விசாரணை
இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் ஹவாலா பணம் கைமாறி இருப்பதாகக் [காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் இருவரும் முன் ஜாமின் பெற்றுள்ள நிலையில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் மதுரையை சேர்ந்த 4 பேரிடம் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
