
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ’’மிகவும் இருண்ட, ஆழமான சீன நாட்டிடம், இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டது போலத் தோன்றுகிறது. அவர்கள் ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை சொந்தமாக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகிய மூவரும் ஒன்றாக நடந்துவரும் புகைப்படத்தை இணைத்து, ட்ரம்ப் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இந்தியா இடையிலான முரண், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ரஷ்யா உடன் எண்ணெய் வணிகம் செய்வதால் இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவிகித வரி விதித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தவே இந்த அழுத்தத்தை அளிப்பதாக ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விடாததும் இந்த வரி விதிப்புக்குக் காரணம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு
இதற்கிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிரமான வரிகளால் பாதிக்கப்பட்ட பல சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகிய மூவரும் சிரித்தபடியும், மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொண்டபடியும் நடந்து வந்த புகைப்படங்கள், அண்மையில் வைரலானது.
இதைக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ,’’மிகவும் இருண்ட, ஆழமான சீன நாட்டிடம், இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டது போலத் தோன்றுகிறது. அவர்கள் ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை சொந்தமாக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.