
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன.
அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, “பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது.
பல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும் இருந்தன. அதற்காக கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் செப்டிசீமியா நோய் வந்து உயிரிழப்பு ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், `இந்தூரின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அரசு சுகாதார அமைப்பின் மோசமான நிலையை வெளிக்காட்டுகிறது’ என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர்.
அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரண்டு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “இந்தூரில் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் இரு புதிதாகப் பிறந்த குழந்தைகள் எலிகள் கடித்து இறந்தது – இது விபத்து அல்ல, இது நேரடியான கொலை.
இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் உணர்வற்றது, இதைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது.
ஒரு தாயின் மடியில் இருந்து அவளது குழந்தை பிரிக்கப்பட்டிருக்கிறது. அரசு தனது மிக அடிப்படையான பொறுப்பையே நிறைவேற்றவில்லை.