சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே நடுவனேரி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். 59 வயதான இவர், தனது சொந்த தேவைக்காக செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக பலரை அணுகியபோது, அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து, விக்னேஷ் தான் சொந்தமாக வாங்கி பயன்படுத்திய இன்னோவா காரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது. செகண்ட் ஹேண்டில் வாங்கிய காரை பாஸ்கரன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென காணாமல்போனது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த, பாஸ்கரன் இதுகுறித்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலிடம் புகார் மனு அளித்துள்ளார். பின்னர், எஸ்.பி.-யின் உத்தரவின்படி, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது
இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், சேலம் சோளம்பள்ளம் பகுதியில் திருடுபோன இன்னோவா கார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திடீர் திருப்பமாக அந்த காரை விற்பனை செய்த விக்னேஷ், தனது கூட்டாளிகள் முரளிகண்ணன் மற்றும் சுப்பிரமணியுடன் பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், இன்னோவா காரை பாஸ்கரனுக்கு செகண்ட் ஹேண்டில் விற்பது போல் 10 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்
இதையடுத்து, தனது கூட்டாளிகளுடன் சென்று பாஸ்கரன் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை விக்னேஷ் திருடியது அம்பலமானது
