ராம் சார் தளம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படவில்லை.எனவே, தற்போதைய பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காடு எல்லைகளுக்கு வெளியே உள்ள, தனியார் பட்டா நிலங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தான் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள ஒட்டுமொத்த அறிக்கை.
கன்னித்தீவு சிந்துபாத் தொடர் போல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், உண்மைகளை மறைத்து, அறிக்கையின் கடைசி நான்கு வரிகளில், ராம் சார் இடம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று அவசர அவசரமாக தெளிவற்ற பதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான், சென்னை நகரில் அறிவிக்கப்படாத பறவைகள் சரணாலயமாக, தலைநகரின் பெருமையை கூறும் வகையில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஈர நிலப்பகுதி.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பாற்றுவோம் மேம்படுத்துவோம் என்று முதல்வர் கூறியதற்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் முதல்வர் தண்டிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, கடந்த ஜனவரி 2024 இல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், தமிழக அரசுடன் பிரிகேட் நிறுவனம் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
விபரங்கள், சுற்றுச்சூழல், வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அளித்துள்ள அனுமதிகள், இந்த நிறுவனத்தின் மீது தமிழக அரசு துறைகளுக்கு உள்ள தனிப்பட்ட ஆர்வம் குறித்து மக்கள் மன்றத்தில் விரிவாக பதில் கூற வேண்டும்.
தமிழகத்தில் சாதாரண மக்கள் வீடு கட்ட அனுமதி கேட்டால், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் அலைக்கழிக்கப்படும் சூழ்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற மூன்றாவது நாளே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) கட்டுமான அனுமதி, பிரிகேட் கட்டுமான நிறுவனத்திற்கு போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட்டது எப்படி?
பள்ளிக்கரணை ராம் சார் தள ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதன்படி வரைபடம் தயாரித்து, பொது மக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் வனத்துறை இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும். அதற்கு இன்னும் 240 நாட்கள் அவகாசம் உள்ளது.
இப்படி மேற்கூறிய ஒரு விளக்கம் அளிக்கும் தமிழக அரசு, வனத்துறையின் இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்காமல், வேகவேகமாக தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததன் நோக்கம் என்ன?
மேலும், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு வெளியில் உள்ள, தனியார் பட்டா நிலங்களில் மட்டுமே சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு கட்டுமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் தமிழக அரசு, எந்தக் கட்டுமான நிறுவனம், எந்த சர்வே எண் என்பதை பெயருடன் விளக்கமாக சொல்லாமல் மறைப்பது ஏன்?
சர்வே எண் 534/4, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் மிக அருகே இருப்பதை மறைத்து, அந்த நிலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து 65 மீட்டர் தொலைவில் உள்ளது என்னும் பொய்யான அறிக்கை பெறப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளிக்காதது ஏன்?
மேலும், ராம் சார் பகுதியில் எந்தவித கட்டுமானமும் செய்யக்கூடாது, ராம் சார் பகுதிக்கு அருகே குறிப்பிட்ட எல்லை
வரை பட்டா நிலமாக இருந்தாலும் அதில் கட்டுமானம் கட்டக்கூடாது என்றும் விதிமுறைகள் தெளிவாக விதிமுறைகள் உள்ளன.
ராம் சார் தள ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. ராம் சார் தள இடங்கள் இன்னும் தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்தால் வரையறை செய்யப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசு, உலக அரங்கில் ராம் சார் நிலத்தை பாதுகாப்போம் என்று வழங்கிய உறுதி மொழியையும், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராம் சார் நிலத்தை பாதுகாத்து மேம்படுத்துவேன் என்று அளித்த உறுதி மொழியையும் காற்றில் பறக்க விடும் வகையில் ,
அவசர அவசரமாக அனுமதி வழங்கிய சி.எம்.டி.ஏ.வின் அன்றைய செயலாளர் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த ராகுல்நாத் ஐ.ஏ.எஸ்., அன்றைய செயாவின் ( SEIAA) தலைவர் கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ்., எஸ்.சி.எ.சி. தலைவர் தீனபந்து ஆகியோரிடம் முழுமையான விளக்கம் பெற்று,
தமிழக அரசால், புதிதாக ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள், தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளாக பருவ மழையின் போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிப்புக்கு உள்ளாகி வருவது தெரிந்தும், தமிழக அரசு இதுபோன்ற திட்டங்களுக்கு சட்ட விரோதமாக, வேகவேகமாக அனுமதி அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள பட்டா நிலங்களில் கட்டிடங்கள் கட்ட, ஏழை நடுத்தர மக்கள், சிறு கட்டுமான நிறுவனங்கள், தமிழக அரசுத்துறைகளில் விண்ணப்பித்தால், மத்திய – மாநில அரசுகளின் துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று நிர்பந்தித்து, மாதக்கணக்கிலும், வருடக்கணக்கிலும் அலைக்கழித்து அனுமதி அளிக்கின்றனர்.
ஆனால், பிரிகேட் நிறுவனத்திற்கு மட்டும் எந்த விதிமுறைகளும் இல்லாமல், மக்கள் நலனை மறந்து, அந்நிறுவனத்திற்கு ஆதாயம் அளிக்கும் வகையில்
அவசர அவசரமாக அனுமதி அளித்துள்ளனர்.
ராம் சார் தள ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், பொதுமக்களிடம் கருத்து கேட்பும் நடைபெறாத நிலையில், எதன் அடிப்படையில் வனத்துறை அந்நிறுவனத்திற்கு தடையில்லாச் சான்றுகளை வழங்கி உள்ளது?
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் வனத்துறை சுற்றுச்சூழல் துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழும துறை என பல்வேறு துறைகளிலும், அதிகார மட்டங்களிலும் சட்ட விதிமீறல்கள் ஊழல்கள் நடந்துள்ளன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு திமுக அரசு அனுமதி வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஊழலில் ஊறித்திளைக்கும் தமிழக அரசை எதிர்த்து பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகளைக் பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்று தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சட்டத்துக்கு புறம்பான கட்டுமானத்துக்கு எதிராக பாஜக சமரசம் இல்லாமல் போராடும். தமிழக அரசின் சட்ட விரோத அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பூபேந்திர யாதவுக்கு நானும், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அனுப்பிய கடிதத்திற்கு நேற்று பதில் வந்துள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பிரச்சனை குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த உள்ளது. எனவே இதுகுறித்து தங்களிடம் உள்ள ஆதாரங்களையும், விபரங்களை ஆதாரங்களையும் தாருங்கள் என்று கேட்டுள்ளார்கள். விரைவில் சுற்றுச்சூழல் துறைக்கு ஆதாரங்களையும், விபரங்களையும் அனுப்ப இருக்கிறோம். ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க பாஜக அனுமதிக்காது.
எனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி விவகாரத்தில், மத்திய அரசுத் துறைகளின் கருத்தைக் கேட்டுத்தான் முடிவு எடுக்க வேண்டும் என்பதை, தமிழக சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டது போல, உயர்நீதிமன்ற நீதிபதி, முன்னாள் டி.ஜி.பி., முன்னாள் வருவாய்துறை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை நியமித்து, விசாரணை நடத்தி, நேர்மையான முறையில் அந்த கட்டுமான நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பெருங்குடி கள்ளுகுட்டை சதுப்பு நிலப் பகுதிகளில், கால் கிரவுண்டு நிலம் பத்து லட்ச ரூபாய்க்கு சட்ட விரோதமாக விற்கப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.
மாவட்ட வன அலுவலர் சுப்பையா ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்களை வேறு இடங்களுக்கு மறு குடியமர்வு செய்வதாகவும், இதுகுறித்து சோழிங்கநல்லூர் தாசில்தார், பள்ளிக்கரணை வனச்சரக அலுவலர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில், சென்னை பள்ளிக்கரணை மற்றும் தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலக் காடுகளை காத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் தமிழக சதுப்பு நில மீட்பு ஆணையம் அமைத்து இயற்கையை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்,
செய்தி தொடர்பாளர்,
தமிழக பாரதிய ஜனதா கட்சி,
+91 98401 70721.
