அனாதையான ஓபிஎஸ்!
கவர்னரா? கட்சி மாறலா?
அடுத்த மாதத்தில் அதிர்ச்சி முடிவுகள்!!
நாங்கள் அரசியல் கட்சி இல்லை என்று ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறி உள்ளார்.ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏவாக இருந்தவர் வைத்திலிங்கம். இன்று அவரிடம் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது, அரசியலில் சரியான முடிவை எடுக்காத காரணத்தால் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்ததாக வைத்திலிங்கம் கூறியிருந்தார்.இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ்சிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்கள், தை பிறந்துவிட்டதே என ஒரு நிருபர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், தை மாதத்தில் இன்னும் 25 நாட்கள் உள்ளன என்று கூறினார்.அரசியலில் சரியான முடிவை எடுக்காததால் தான் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர் என்று வைத்திலிங்கம் கூறியதை எப்படி பார்க்கிறீர்கள் என்று மற்றொரு நிருபர் கேள்வி எழுப்பினார். அப்போது, எந்த கட்சி, நாங்கள் அரசியல் கட்சி இல்லை என்று பதிலளித்த படியே ஓபிஎஸ் சென்றார்.
தற்போது டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்ததற்குப்பிறகு ஓபிஎஸ் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ்ஸை விட்டு விலகி மனோஜ்பாண்டியன், மருதுஅழகுராஜ், சுப்புரத்தினம், லேட்டஸ்ட்டாக வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்து விட்ட நிலையில் தனித்து விடப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ். வைத்திலிங்கத்தின் ஆதரவாளரான குன்னம் ராமசந்திரன் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று கூறி விட்டார்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள மோடி பங்கேற்கும் அரசியல் மேடையிலும் ஓபிஎஸ் கலந்து கொள்ள இதுவரை அழைப்பில்லை.
நேற்று 21-1-2026 புதனன்று மதியம் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை சந்திக்கச்சென்ற ஓபிஎஸ்ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் சந்திக்க முடியாமலேயே திரும்பிச்சென்றிருக்கிறார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்ன ஓபிஎஸ் மீண்டும் தை மாதம் முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளதென கூறி விட்டுச்சென்று விட்டார்.
இதனால் ஓபிஎஸ்ஸூக்கு இரண்டேஇரண்டு வாய்ப்புக்களே உள்ளது. செங்கோட்டையன் மூலம் அவர். த.வெ.க.வில் இணைவது, அல்லது திமுகவில் இணைவது. ஆனால் த.வெ.க.வே தேர்தலைப்புறக்கணிக்கும் நிலையில் இருப்பதால் அந்தக்கட்சிக்கு சோதனைகள் அதிகம் என்பதால் அங்கு சென்றாலும் ஓபிஎஸ் வீணாகப் போகும் நிலைதான் ஏற்படும்.
மாறாக, அவர் திமுகவிற்கு சென்றாலும் பெரிய பலனில்லை. வேண்டுமென்றால் எம்.எல்.ஏ.வாகி தேனி மாவட்ட செயலாளராகலாம். ஆனால் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்த ஒருவர் திமுகவில் எம்.எல்.ஏ.வாக ஆவது அவரது இமேஜூக்கே அசிங்கமாகி விடும். பத்தோடு பதினொன்றாகவே அவர் கருதப்படுவார். எனவே, இன்றைய சூழலில் ஓபிஎஸ் கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
நாம் ஓபிஎஸ்ஸின் நிலை என்னவென்று டெல்லி கில்லி ஒருவரிடம் கேட்டபோது, அவர் நம்மிடம், ” ஓபிஎஸ் உருவான தலைவரல்ல. அவர் உருவாக்கப்பட்ட தலைவர். அவர் தினகரனால் வளர்க்கப்பட்டவர். அதே தினகரனால் காணாமல் போனவர். தினகரன் பேச்சைக்கேட்டு சொந்த தேனி தொகுதியை விட்டுவிட்டு ராமநாதபுரத்தில் அவர் போட்டியிட்டதே பெரிய தவறு. அதிலும் அவரது எதிராளி நவாஸ்கனி ஓட்டுக்காக 500 கொடுத்த போது இவர் 300 கொடுத்து அதில் சில நிர்வாகிகளால் 200 ஆக வழங்கப்பட்டதே தோற்க காரணம். அவர் ராமநாதபுரத்தில் வென்றிருக்க வேண்டும். ஆனால் வெல்லவில்லை.
வென்றிருந்தால் பிஜேபி அவரைத்தேடியிருக்கும். இன்றவர் பிஜேபியையும் விஜயையும் தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது நடக்கவில்லை. ஓபிஎஸ் இனி எங்கு சென்றாலும் அது அவருக்கு மரியாதையல்ல. அழகுமல்ல!” என்று போட்டுடைத்தார்.
நாம் விசாரித்த வரையில் கடைசியாக சசிகலா என்ற சிங்கப்பெண்ணின் ஆணைக்காக காத்திருக்கிறார் என்று சொல்கின்றனர்.
அரசியலில் கடைசி நொடி கூட தலைகீழ் மாற்றங்கள் நிகழும் என்பதே இதன் உண்மை காரணம்.
எதுவும் நடக்கலாம்.
- அதி பயங்கர விபரீதன்
