தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் 21, மதுரை மாவட்டம் பராபத்தியில் நடைபெற்றது. இதை தவெகவின் ‘ஷோ ஆஃப் ஸ்ட்ரெங்த்’ என அக்கட்சி தொண்டர்கள் புளங்காகிதப்பட்டனர். 500 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மாநாட்டில் 4 லட்சம் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். விஜயின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடி, “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்” என்று கூறி உற்சாகம் கொண்டாடினர். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியலில் புதிய அலையை தொடங்கி இருப்பதாக உற்சாகமடைந்தனர்.
தவெக மாநாட்டை உடைக்கும் வகையில் போட்டியாக கரூரில் திமுக முப்பெரும் விழாவை நடத்த திட்டமிட்டது அக்கட்சியின் தலைமை. தமிழக அரசியலில் கரூர் தொகுதி என்றால் திமுகவின் ‘கோட்டை’ என இப்போது கருதப்படும் இடமாக மாறிவிட்டது. காரணம் செந்தில் பாலாஜி. அங்கு 5 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.திமுக கரூர் மாவட்டச் செயலாளரான அவருக்கு பெரும் செல்வாக்குள்ள பகுதியாக திமுக நிமிர்ந்து நிற்கிறது. இந்நிலையில் அங்கு சமீபத்தில் செந்தில் பாலாஜி முன்னெடுப்பில் திமுக முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜயின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு போட்டியாக கருதப்பட்ட இந்த திமுக மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை “மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பானம்” என்று பாராட்டினார். “கோடு போட சொன்னால் ரோடு போட்டிருக்கிறார்” என செந்தில் பாலாஜியை புகழ்ந்தார். இந்தக் கூட்டத்தை “பணம் கொடுத்து வண்டி ஏற்றி அழைத்து வரப்பட்ட கூட்டம்” என்று இதை தவெக ஆதரவாளர்கள் எள்ளி நகையாடினர்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளார். இது செந்தில் பாலாஜிக்கு நேரடி சவால் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் கூட்டம் தவெகவின் முதல் மாநில மாநாட்டுக்கு கூடிய அளவிலான பொதுக்கூட்டமாக இருக்கும் என்றும் “கரூர் சீன் வேற லெவல்” என்று குதூகலித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் “கரூர் மண் செந்தில் பாலாஜியின் மண்” என்று நம்புகின்றனர். தவெக தொண்டர்கள் “செந்தில் பாலாஜியின் கோட்டையை உடைக்கிறோம்” என்று உற்சாகம் காட்டுகின்றனர்.
‘‘விஜயை விட கெத்தா ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்று ஒரு லட்சம் சேர் ஒன்றரை லட்சம் பேருன்னு ஒரு பிரம்மாண்டமான மாநாடு நடத்தினாங்க. இதைப்பார்த்த விஜய் அடுத்த வாரமே காரூரில் மீட்டிங்கை போடுங்க என மீட்டிங்கை மாற்றி விட்டார். உண்மையாகவே கரூர் மீட்டிங்க் டிசம்பர் மாதம் நடக்க வேண்டியது. தலைவனுக்கு இவ்வளவு ஈகோ இருக்கும் என்று நினைத்துக் கூடப்பார்க்கவில்லை.லைவன் பலமேரை இந்த மீட்டிங்கில் பொளபொளவென பொளக்கப்போகிறார்’’ என குதூகலிக்கிறார்கள் தவெக தொண்டர்கள்.
இந்தக் கூட்டத்தில் விஜய், ‘‘கரூர் நகராட்சி சீரழிவு, செந்தில் பாலாஜி மீதான காவிரி ஆற்றில் மணல் கொள்ளை, டாஸ்மாக்மது விற்பனை ஊழல் ஆகியவற்றை மையமாகப் பேச உள்ளதாக தகவல்கள். 2021-ல் லாக்டவுன் காலத்தில் ஜவுளி கடைகளை திறக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்னர் அபராதம் விதித்ததாகவு வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இவற்றையெல்லாம் வைத்து விஜய் அட்டாக்கை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்பு செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி என்று விமர்சிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை, ஸ்டாலின் அதிமுக ஊழலை மறைத்து இப்போது தியாகி என்று சித்தரிக்கிறார்கள். ஊழல் வழக்குகள், ED சோதனை, ராஜினாமா என பல விஷயங்களையும் செந்தில் பாலாஜி குறித்து நெற்றியில் அடித்தாற்போல அட்டாக் செய்ய விய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜயின் கூட்டத்திற்கு ஆள் வராமல் தடுப்பதற்காக செந்தில் பாலாஜி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காசு கொடுத்து வருவதாகவும் பகீர் குற்றச்சாட்டு கிளம்பி உள்ளது.
