வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் எதிர்கால வியூகம் குறித்து முடிவெடுப்பதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) உடனான கூட்டணி அழுத்தங்கள் குறித்து அவர் மூத்த தலைவர்களிடம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயை கூட்டணியில் சேர்க்காவிட்டால், எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதில்கூட அ.தி.மு.க. சிரமப்படக்கூடும் என்று பழனிசாமி தனிப்பட்ட முறையில் நெருங்கிய சிலரிடம் பேசியதாக கட்சி உள்வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம், விஜயை கூட்டணியில் சேர்த்தால், அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்ற அச்சமும் நிலவுகிறது.
விஜய் வந்தாலும் சிக்கல் வரவில்லை என்றாலும் சிக்கல்
தற்போதைய பேச்சுவார்த்தைகளின்படி, ஒரு பெரிய கூட்டணி அமைந்தால், அ.தி.மு.க.வுக்கு 80 முதல் 90 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு சுமார் 150 முதல் 160 இடங்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முன்மொழியப்பட்ட தொகுதிப் பங்கீட்டின்படி, பாஜகவுக்கு 40 இடங்களுடன் ஒரு துணை முதல்வர் பதவியும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 50 இடங்களுடன் ஒரு துணை முதல்வர் பதவியும், பாமகவுக்கு 25 இடங்களுடன் ஒரு எம்.பி பதவியும், தே.மு.தி.க.வுக்கு 20 இடங்களுடன் பின்னர் ஒரு எம்.பி பதவியும், த.மா.கா.வுக்கு 6 இடங்களும், ஐ.ஜே.கே.வுக்கு 5 இடங்களும், சிறிய கட்சிகளுக்கு சுமார் 10 இடங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்ற “ரெட் நோட்” அதாவது ரிப்போர்ட் ஒன்று எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டு உள்ளது . இது அ.தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய குறைந்த பங்கீட்டை கட்சித் தொண்டர்கள் ஏற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சட்டமன்றத்தில் தொங்கு நிலை ஏற்பட்டாலும்கூட, பாஜக அ.தி.மு.க தலைமையில் அரசு அமைக்க ஆதரவளிக்காது என்ற அச்சமும் உள்ளது. இந்த நிச்சயமற்ற நிலைமைகளால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அழுத்தத்தில் இருப்பதாகவும், அரசு அமைப்பது சாத்தியமில்லாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதிலாவது அவர் கவனம் செலுத்துகிறார் என்றும் சில தலைவர்கள் கூறுகின்றனர்.
அமித் ஷா பிளான்
இதை பற்றி பேச, பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா விரைவில் தமிழகம் வரவுள்ளார். அவரது வருகை, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான கட்சிகளின் தேர்தல் பணிகளுக்கு இடையே முக்கியத்துவம் பெறுகிறது. இவரின் இந்தப் பயணம், மாநிலத்தில் அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதும், அவர்களின் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதும் ஷாவின் முக்கிய நோக்கமாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக உட்கட்சி மோதல்கள், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் வருத்தங்கள், எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அமித் ஷா இதில் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
விஜய் அமித் ஷா
அதேபோல், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பிரதிநிதிகளையும் அமித் ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி, தமிழகத்தில் பாஜகவின் நிலையை வலுப்படுத்தும் என பாஜக தலைமை நம்புகிறது. ஏனெனில், தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விஜய் அல்லது அவரது முக்கியப் பிரதிநிதிகளுடனான அமித் ஷாவின் சந்திப்பு, சாத்தியமான ஒப்பந்தங்கள், இடப் பங்கீடு மற்றும் கொள்கை ஒருமைப்பாடு குறித்து கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று அவர் விஜயை சந்திப்பார்.. அல்லது விஜயின் பிரதிநிதியாக வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இது அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையலாம்.
மேலும், விஜய்யின் நெருங்கிய பிரதிநிதி ஒருவர் அமித் ஷாவைச் சந்தித்து பாஜகவின் திட்டங்களை முதலில் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பொறுத்து, விஜய் நேரடியாக அமித் ஷாவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
பாஜக போடும் பிளான்
இதற்கிடையில், பாஜக தற்போதுள்ள அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் சிலவற்றைக் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமி தற்போது மௌனம் காத்து வருகிறார். விஜய் கூட்டணியில் இணைந்தால், தங்கள் தொகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மேம்படும் என்று பல முன்னாள் அமைச்சர்கள் நம்புகின்றனர். இருப்பினும், விஜய் கூட்டணியில் சேராவிட்டால், சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் விலகலாம் என்ற வதந்திகளும் பரவி வருகின்றன.
இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைவதால், ஜனவரி மாதத்திற்குப் பிறகு அ.தி.மு.க.வில் பெரும் உட்கட்சி பூசல் ஏற்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
