விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான், நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்று வடிகட்டிய பொய்யை சொல்லி மத்திய அரசு மீது அவதூறு பிரச்சாரம் செய்யும் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி,
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? இந்தத் திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏன் கொண்டு வந்தார்? எதற்காக 100 கிலோவிற்கு, 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியினை கலக்க வேண்டும் என்று மத்திய அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது என்பதை, தனது வாயால், பத்திரிகையாளர்களுக்கும் தமிழக மக்களுக்கும் முதலில் விளக்க வேண்டும். இதுகுறித்து போதிய அறிவு இல்லை என்றால், மத்திய அரசின் திட்டத்தைப் படித்து புரிந்து தெளிவு பெற வேண்டும்.
இந்தியாவில் அரிசி உணவாக சாப்பிடும் மக்களில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர், வைட்டமின் பி 12, போலிக் அமிலம், இரும்புச்சத்து உள்ளிட்ட பிற வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, ரத்த சோகை உள்ளிட்ட பல நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டதை தடுக்க, உலகளவில் பல்வேறு ஆய்வுகளால் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட உணவு செறிவூட்டல் வழிமுறையை பின்பற்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் திட்டம் மத்திய மோடி அரசால் தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025-2026 ஆம் பருவத்தில் நடப்பு கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவை செய்வதற்குத் தேவையான செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்திட மத்திய அரசால் 29.07.2025 அன்றே புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டும், ஏறத்தாழ 75 நாட்கள் இரண்டரை மாதங்களுக்கு மேல், விவசாயிகள், மக்களின் நலனைப் புறக்கணித்து, தீபாவளி ரேஷன் கொள்முதல் ஊழலில் வசதியாக மறந்துவிட்டு, 07.10.2025 அன்று 34,000 மெ.டன் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல் செய்திட தமிழக அரசு தாமதமாக பணியாணை வழங்கியது ஏன் என்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் செறிவூட்டப்பட்ட அரிசிக்கான தர உறுதி ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியுள்ளது என்று, தமிழக அரசு ஆண்டு கணக்கில், மாதக்கணக்கில் மத்திய அரசிடம் விண்ணப்பித்து காத்திருந்தது போல, வியாக்கியானம் பேசும் அமைச்சர் சக்கரபாணி,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அரிசியை ஒப்பந்தக்காரர்கள் மூலமாக அனுப்பிவிட்டு, இதுவரை மத்திய அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை.
மத்திய அரசிடம் இருந்து அனுமதி வந்த பிறகு, செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டு விடும் என, இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசிடம் விண்ணப்பித்து விட்டு, இத்தனை மாதமாக நெல் மூட்டைகள் தேங்கியதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றப் பார்க்கிறார்.
ஆனால் தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரித்ததே, நெல் மூட்டைகள் தேக்கமடைய முழு காரணம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைத்து நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் தவறுகளை தட்டிக் கேட்டால், நிர்வாகச் சீர்கேடுகளை சுட்டிக் காட்டினால், அமைச்சர் சக்கரபாணி
கண் மண் தெரியாமல் மோடி அரசின் மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
உண்மை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஏதேதோ பேசி வருகிறார் என்று நீலிக் கண்ணீர் வடித்து, மத்திய மாநில அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை கேலிக்குரியாக்கி கேள்விக்குறியாக்கி, மத்திய அரசு மேல் பழியை சுமத்தி நாடகமாடுவது தான் திராவிட மாடல் அரசியலா?
நடப்புப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 8,44,000 மெ.டன் நெல்லினை உடனுக்குடன் அரவை செய்ய இயலாமல் கிடங்குகள் மற்றும் அரவை ஆலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் கொள்முதல் செய்யப்படும் மண்டலங்களில் நெல் நகர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று பச்சைப் பொய்யை பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தின் சிறப்பை கெடுக்கும் வகையில், உண்மையை மறைத்து சம்பந்தமில்லாமல் மத்திய அரசின் அளிக்க வேண்டிய அனுமதி பற்றி அவதூறு பேசி, நெல் கொள்முதலில் தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்கப் பார்ப்பது ஏன்?
தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகம். இந்த ஆண்டு சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது என்று விவரமாக பேசும் அமைச்சர் சக்கரபாணி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக தேவையான அளவு திறப்பதற்கு முயற்சி செய்யாதது ஏன்?
நெல் கொள்முதலை முறையாக செய்யாமல், நெல் கிடங்குகளை பராமரிக்காமல், புதிய நெல் கிடங்குகளை அமைக்காமல், தற்காலிக பாதுகாப்பான நெல் கிடங்குகள் அல்லது சர்க்கரை ஆலை கிடங்குகள், தனியார் கிடங்குகள் என எந்த முயற்சியும் செய்யாமல் மத்திய அரசின் மீது பழி போடுவது ஏன்?
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேர்மையுடன், தமிழக மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ளும் வகையில், விவசாயமும் விவசாயிகளும் காப்பாற்றப்பட, இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழக அரசின் விவசாயத் துறை, உணவுத்துறை என இரண்டு துறைகளிலும் வெட்கக்கேடான நிர்வாக திறனற்ற செயல்பாடுகளால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பிற்கும் , மன உளைச்சலுக்கும் திமுக அரசின் தவறுகளை மறைப்பதற்கு வசதியாக, திராவிட மாடல் பழமொழியான, வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று சம்பந்தமில்லாமல் மத்திய அரசின் மீதும் குற்றம் சாட்டுவதை
தமிழக அமைச்சர்கள் கைவிட்டு, தங்கள் துறைகளை மேம்படுத்துவதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான முக்கியமான முன்னெடுப்பை திராவிட மாடல அரசு எடுத்துள்ளது என்று ட்விட்டரில் பெருமை பேசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வதை பற்றி கவலைப்படாமல், விவசாயிகளின் நலனுக்கு எதிராக திராவிட மாடல் அரசு செயல்படுவது குறித்து வாய் திறக்காதது ஏன்?
விவசாய சங்கங்களும், விவசாயிகளும் ஊடகங்களின் வாயிலாக நெல் கொள்முதல் நிலையங்களில், சட்டத்துக்கு புறம்பாக கமிஷன் கேட்டு மிரட்டிய அரசியல் இடைத்தரகர்களையும், நெல் கொள்முதல் நிலைய ஊழல்களையும் வெளிப்படையாக ஆதாரத்துடன் சுட்டி காட்டிய போதும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதை தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நெல் கொள்முதல் முறையாக நடப்பதற்கும், தமிழக மக்களின் நலம் காக்க, ரத்த சோகை நோய் இல்லாத மாநிலமாக தமிழகம் ஆரோக்கியமாக உருவாக, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டா விட்டாலும், அவதூறு பேசாமல், செறிவூட்டப்பட்ட அரிசிக்கான தர உறுதி ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகளை விரைந்து செய்யுங்கள்.
தமிழக அரசின் முயற்சிகளுக்கு பாஜக துணை நிற்கும்.
ஏ.என்.எஸ்.பிரசாத்,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
+91 98401 70721.
