மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்ப்பு முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் மின்சாரம் இல்லை, சாலை வசதி வேண்டும், படிப்புக்கு உதவி வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துத் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒருவர், தனது மனைவி இரவில் நாகினியாக மாறிவிடுகிறாள், எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று கூறி மாவட்ட ஆட்சியரையே அதிர வைத்திருக்கிறார். முதலில் இதையெல்லாம் நம்பாத அதிகாரிகள், அந்த நபர் போதையில் ஏதோ உளறுவதாக எண்ணியுள்ளனர். ஆனால், விடாபிடியாக நடந்தவற்றை ஆட்சியரிடம் எடுத்துரைத்ததும், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
சீதாப்பூர் மாவட்டம், லோதாசா கிராமத்தைச் சேர்ந்தவர் மெராஜ். இவருக்கு ராஜ்பூரைச் சேர்ந்த நசீமுன் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த இவர்களது வாழ்க்கையில், இரவு நேர சம்பவங்கள் பல வில்லங்கங்களை கொண்டுவந்து சேர்த்துள்ளன. இதுகுறித்துத் தான் தற்போது ஆட்சியரிடம் மெராஜ் புகார் அளித்திருக்கிறார்.
