10 படங்களில் நடித்துவிட்டாலே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மாயையில் சிலர் இருப்பதாக தவெக தலைவர் விஜய்யை அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைகைச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், “யார் யாரோ இன்று புதிதாக கிளம்பியுள்ளனர். 10 படங்கள் ஓடினாலே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
அனுபவம் இல்லாதவர்களாக உள்ளனர். ஆனால் திமுகவை எதிர்க்கிறார்கள் என்ற முறையில் வாழ்த்தலாம். ஆனால் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் அளவிற்கு பக்குவமும், பட்டறிவும், அரசியல் அறிவும், அனுபவமும் பெற இன்னும் பயிற்சி பெற வேண்டும். வந்த உடனே நான்தான் முதலமைச்சர், நான் தான் முதலமைச்சர் எனக் கூறுவதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே எப்போதும் பக்குவமான, பழக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த அதிமுக ஆட்சி தமிழகத்தில் வருவது தான் அனைவருக்கும் பாதுகாப்பு. எனவே அனைவரும் சிந்தித்துச் செயலாற்றி வருகின்ற தேர்தலில் எடப்பாடி தலைமையில் நல்ல ஆட்சியை உருவாக்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் இப்போது மத்திய அரசை எந்தவிதமான காரணமும் இல்லாமல் வசைப்பாடி கொண்டு உள்ளனர். மத்திய அரசுடன் நமக்கு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் மக்களுக்காக செய்திருக்கிற சில சாதனைகளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தேர்தல் என்று சொன்னாலே அதில் தில்லுமுல்லு செய்வதில் பெரிய கைதேர்ந்தவர்கள் மகா கில்லாடிகள் திமுகவினர்.
தேர்தல் வாக்காளர் படிவத்திலே போலி வாக்காளர்களை உள்ளே புகுத்தி லட்சக்கணக்கான வாக்காளர்களை சேர்த்து ஓட்டுகளை பதிவு செய்ய வைப்பதில் திமுகவினருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. கள்ள ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்த ஒரு இயக்கம் இருக்கிறது என்று சொன்னால் அது திமுக தான்.
கள்ள ஓட்டு போடுவதற்காகவே அதை முதலில் தயார் செய்து வைத்து விடுவார்கள். நாட்டில் செத்தவன் எல்லாம் உயிரோடு வரக்கூடிய ஒரே நாள் தேர்தல் அன்றுதான். செத்தவன் எல்லாம் வந்து ஓட்டு போட்டுட்டு போய்விடுவான். கிராமங்களில் கள்ள ஓட்டு போட முடியாது. நகர்புறங்களில் தான் போலி வாக்காளர்களை திட்டமிட்டு சேர்த்து அவைகளை வாக்குகளாக மாற்றி அவர்களது கட்சிக்காரர்களை வைத்து வாக்களித்து விடுவார்கள். இந்த முறையை தடுத்து நிறுத்துவதற்காக தான் வாக்கு சீர்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.” என்று நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
