DEMAND DMDK!
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் மீண்டும் ஒரு தேர்தலைச்சந்திக்கவிருக்கிறது தே.மு.தி.க.
சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் தங்களின் டிமாண்ட் என்னவென்பதை தேமுதிக கூறி இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த், இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேபோல் சிறிய கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இரு பெரிய கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன. அந்த வகையில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
2 மாதங்களுக்கு முன்பாக திமுக கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் பக்கம் செல்வார் என்று கூறப்பட்ட போது, திடீரென அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான கேசி வீரமணி சந்தித்தார். அதன்பின் தேமுதிகவின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் மதுரையில் தொடங்கிய போது, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆர்பி உதயகுமார் பிரேமலதாவை நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தார்.
தேமுதிகவை பொறுத்தவரை வாக்கு சதவிகிதம் குறைவு என்றாலும், அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பூத் கமிட்டியை சரியாக செய்து முடிக்கும் அனுபவம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு கட்டமைப்பு ரீதியாக சிறப்பாக பணிகளை செய்து முடித்திருந்தது தேமுதிக. இதன் காரணமாக கடைசி வரை விஜய பிரபாகரன் போட்டி கொடுத்திருந்தார்.
தற்போது விஜய் களத்திற்கு வந்திருப்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி முடிவாகும் என்று கருதப்படுகிறது. இதனால் எந்த சிறிய கட்சியின் ஆதரவையும் திமுக மற்றும் அதிமுக இலக்க தயாராக இல்லை. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் நேரில் செல்கிறார்கள் என்றால், மறுபக்கம் கேஎன் நேரு தன்னுடைய ரூட்டில் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் தனது டிமாண்டை கூறி இருக்கிறார். அதன்படி 20 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடிப் போயிருக்கிறார். ஏனென்றால் பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
தற்போது தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால், சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கருதி இருக்கிறார். மறுபக்கம் திமுக தரப்பில் 8 அல்லது 9 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்று ஒரு ராஜ்ய சபா சீட் உறுதியாக கொடுக்கலாம் என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேமலதா என்ன முடிவு செய்யப் போகிறார் என்பது ஜனவரி9- ந்தேதி கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படலாம்.
