கடந்த 21-ம் தேதி இரவு தினகரனின் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை, சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘நீங்களும் ஓபிஎஸும் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ‘எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த என்.டி.ஏ கூட்டணிக்கு என்னால் வர முடியாது’ என்று கறாராகச் சொன்ன டிடிவி.தினகரன், அண்ணாமலையுடனான நீண்ட உரையாடலுக்குப் பிறகு, ‘உள்ளே வருவேனா, இல்லையா என யோசித்துச் சொல்கிறேன்’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார்.
டெல்லி சந்திப்புக்குப் பிறகு, டிடிவி.தினகரனுக்கு வெளிப்படையாக அழைப்பு விட்டிருந்தார் நயினார் நாகேந்திரன். இந்த நிலையில் அவரை முந்தி, நேரடியாக டிடிவி.தினகரனை சந்தித்து ஆக்டிவ் ஆகியிருக்கிறார் அண்ணாமலை. டிடிவி.தினகரன், ஓபிஎஸை வைத்து நயினாருக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கிறார் அண்ணாமலை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் அண்ணாமலையுடனான சந்திப்பு குறித்து பேசியிருக்கிறார்.
“அண்ணாமலை அவர்கள் மாநிலத் தலைவராக இருந்தப்போதுதான் எங்களைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தார். டெல்லியில் உள்ளவர்களை அவர் சந்தித்துப் பேசி எங்களைக் கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நாங்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை. அண்ணாமலையின் முயற்சியால் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வந்தது.
அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். நான் கூட்டணியில் இருந்து விலகியபோது மீண்டும் இணைய அண்ணாமலை வலியுறுத்தினார். அவரசப்பட வேண்டாம் என்று சொன்னார். என்னைப் பொறுத்தவரை பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது.
செங்கோட்டையன், நாங்கள் என எல்லோரும் எதற்காக டெல்லிக்கு சென்றோம் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களின் நலம் விரும்பிகள் நாங்கள் எதிர்பார்க்கிற மாற்றம் வரும் என்று சொன்னார்கள். அதற்காக தான் காத்திருந்தோம்.
அதற்கு வாய்பில்லை என்று தெரிந்த பிறகு தான் வெளியேறினோம். என்னை டெல்லிக்கு அழைத்து சமாதானப்படுத்த நினைத்தார்கள். இருந்தாலும் என்னால் அந்தக் கூட்டணியில் இருக்க முடியவில்லை. என் நண்பர் அண்ணாமலை வந்தபோதும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன்.
அரசியலைத் தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். என்மேல் பிரியமாக இருக்கக்கூடியவர். அவர் என்னை சந்திக்கும்போது இதைதான் கேட்பார் என்று தெரியும். அதைப் பற்றி பேசிவிட்டு நாங்கள் மற்ற விஷயங்களைத் தான் பேசினோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும் வரை அமமுக மறுபரிசீலனை செய்யாது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
