ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தபோது தான் முதல்வராவதில் விருப்பமில்லை எனத் தெரிவித்து இருந்தார். அவர், அப்போது பாஜகவில் இணையாமல் இருந்த அண்ணாமலையை மனதில் வைத்து பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டது.
கர்நாடகாவில் 9 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி திடீரென ராஜினாமா செய்த அவர், இமயமலைக்கு சென்றார். அங்கே சென்று வந்த பிறகு அங்கே தனக்கு கிடைத்த அனுபவம் தெய்விகமானது. இது முக்கியமான பயணம் என்று கூறினார்.
ரஜினியும் இமயமலை, ஆன்மீகம், என்று ஆர்வம் கொண்டவர். சட்டம் ஒழுங்கு கட்டுகோப்பாக இருக்க வேண்டும் என்று நினைபவர். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினிக்கு , நேர்மையாகவும் ஆன்மீக உணர்வும் கொண்ட ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பிடித்துப்போய்விட்டார்.
முதல்வர் பதவிக்கு ஆசைப்படாத ரஜினி, அண்ணாமலையை மனதில் வைத்துதான் ஆட்சி தலைமை கட்சித் தலைமை தனியாக இருக்க வேண்டும் என்று அப்போது கூறினார். அந்த அளவுக்கு ரஜினியின் அபிமானத்துக்குரியவராக இருந்தவர் அண்ணாமலை. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு பாஜக தன்னை ஒதுக்குவதாக அதிருப்தியில் இருந்து வருகிறார் அண்ணாமலை.
இந்நிலையில், அரசியலில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ரஜினியிடம் அண்ணாமலை தீவிரமாக ஆலோசனை செய்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. தமிழக பாஜகவில் தனக்கு அளவுக்கு அதிகமாக நெருக்கடி கொடுக்கப்படுவதாக உணர்ந்த அண்ணாமலை, சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. டெல்லி கூட்டத்திற்கு அமித்ஷா அழைத்தும் செல்லவில்லை. ஆனால் பாஜகவில் தனது குருநாதர் நினைக்கிற பி.எல். சந்தோஷ் நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் அழைத்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் கலந்து கொண்டார் அண்ணாமலை.
இந்த நிலையில் ரஜினியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து இருக்கிறார் அண்ணாமலை. கிட்டத்தட்ட கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் ரஜினிக்கு இருந்த நெருக்கடிகள் மாதிரி தனக்கு இப்போது இருப்பதாகவும், தமிழக பாஜகவில் தனக்கு எதிராக காரியங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் புலம்பி இருக்கிறார் அண்ணாமலை. எல்லா மட்டத்திலும் தனக்கான முக்கியத்துவம் குறைந்ததை ஒவ்வொன்றாக சொன்ன அண்ணாமலை, இனியும் கட்சியில் இருக்க வேண்டுமா? என்கிற கட்டாயத்திற்கு வந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
அரசியலை விட்டு ஒதுங்கிவிடலாம் என்கிற தனது முடிவை ரஜினியிடம் சொல்லி, அது அப்படியே டெல்லி தலைமைக்கு பாஸ் பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. ஆனால், ரஜினி ஒரு ஆக்சன் படத்தின் பரபரப்பான கதையை கேட்டது போல் அதிர்ந்து போய் உள்ளார். அரசியலில் இப்படி எல்லாம் நடக்குமா? என்பதை தனது உடல் மொழியால் அண்ணாமலைக்கு பதில் சொல்லிய ரஜினி, வேறு எதுவுமே பேசாமல் அதிர்ந்து போய் உள்ளார். பாஜகவின் டெல்லி தலைமை இப்போதும் ரஜினியின் தொடர்பில் இருப்பதால் அண்ணாமலை தன் நிலையை ரஜினியிடம் எடுத்துக் கூறியதாக சொல்கிறார்கள் அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.
