புது ஐட்டம் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும். விஜய்க்கு திமுகதான் ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அவர், ‘‘நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் நாமதான் விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும். புது ஐட்டம் விற்றால் தானே தனிக்கடை போட வேண்டும். திமுகவிற்கு வந்து விடுவார். விஜய் தற்போது இந்திய அரசியலுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.
அதுபோலவே நாங்களும் செயல்படுகிறோம். எனவே, அவர் எங்களுடன் வந்து நிற்க வேண்டிய நேரம் இதுதான். எதிர்காலத்தில் திமுக விஜய்க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அவர் திமுகவுடன் இணைந்து செயல்படக்கூடும். அவரை இப்போது அவசரமாக பேசிவிட்டு பிறகு பருத்தி வீட்ரன் படத்தில் வருவது போல ‘‘அடுத்த மாசம் சாப்பிட வரும்போது, இலையை பார்த்தா குழம்பு ஊத்துறது? முகத்தைப் பார்த்து சிரிக்க வேண்டாமா?’’ என்கிற கதையாகி விடக்கூடாது ‘’ என அவர் தெரிவித்தார்.
கரு.பழனியப்பனின் பேச்சு கமலஹாசன் தரப்பை மறைமுகமாக சாடுவது போல் அமைந்துள்ளடு. 2018ல் தனது கட்சியைத் தொடங்கியபோது, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை ‘ஊழல் கட்சிகள்’ என்று கடுமையாக விமர்சித்தார். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று தோல்வியடைந்த பின், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து செயல்பட்டார். திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். கமலின் இந்த மாற்றம் தமிழக அரசியல் வட்டங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
2023 ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல், “நாட்டை காப்பாற்ற எல்லைக்கோடுகளை மீறி வந்துள்ளோம்” என்று கூறினார். 2024 ஈரோடு பிரச்சாரத்தில், “திமுக அரசு ஏழைகளுக்கானது, இன்னும் சிறப்பாக இயங்க வேண்டும்” என்று பாராட்டினார். ஆரம்பகால விமர்சனங்களுக்கு மாறாக செயல்பட்டதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். “பச்சோந்தியைவிட விரைவாக நிறம் மாறுபவர். திமுக தயவில் எம்.பி-யாக முயல்கிறார்” என
எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். “திமுகவிடம்ட காசு வாங்கி நடிக்கும் நடிகர்’’ என நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்த்தார்.
‘‘ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறாது’’ என விஜய் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெகவினர் “திமுகவின் பினாமி. ரசிகர்களை ஏமாற்றி மாநிலங்களவை பதவிக்காக சரணடைந்தவர்” எனக்கூறினர். கமல் ஹாசனின் திமுக ஆதரவு, அவரது அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் “மாற்று” என்று விளம்பரப்படுத்திய கட்சி, இன்று திமுகவின் விசுவாசியாக மாறிவிட்டது. இது அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்றுத் தந்தாலும், கொள்கை உறுதியின்மை என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
