இது இறுதி ஒப்பந்தமல்ல… 60 நாள்களில் நினைத்ததைப்போல எதுவும் நடக்காவிட்டால், மீண்டும் குண்டு மழை பொழியத் தொடங்கும்” என ஈரான் – அமெரிக்கா இடையேயான முதற்கட்ட ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட பின்னர் பேசியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த முதற்கட்ட ஒப்பந்தமே உலக நாடுகளுக்கு மகிழ்ச்சியை விதைத்திருந்த நிலையில், ட்ரம்ப்பின் எதிர்மறைப் பேச்சுகளும், இஸ்ரேலின் அடாவடி அராஜகங்களும் உலகத் தலைவர்களைச் சற்று கலங்கடிக்கத்தான் செய்திருக்கின்றன. ஈரான் போர் உண்மையிலேயே முடிந்து விட்டதா… அது ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகள் மறைய எத்தனை காலம் பிடிக்கும்?!
1979-ல், ஈரானில் வெடித்த இஸ்லாமியப் புரட்சி, நட்பு நாடான இஸ்ரேலுடன் பகையை உண்டாக்கியது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வார்த்தைப்போரில் ஈடுபட்டவந்த இரு நாடுகளும், 2024-ல் நேரடி ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டன. ஆயினும் அது பெரும் போராக மாறவில்லை. அதன் பின்னர், அவ்வப்போது போர்ப் பதற்றம் நிலவிவந்த நிலையில், பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்காவையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஈரான் மீது போர் தொடுத்தது இஸ்ரேல். `ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது ஈரான்’ என்பதுதான் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் சொன்ன காரணம். சுமார் 40 நாள்கள் நடந்த இந்தப் போர், இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின்படி ஏப்ரல் 8-ல் நிறுத்தப்பட்டது.
