சென்னை,
தமிழக பட்ஜெட் குறித்து துறைவாரியாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் வரும் 22–ந் தேதி வரை நடைபெறுகிறது.
முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றபின் முதன்முதலாக தமிழக சட்டசபை கடந்த மாதம் 18–ந் தேதி கூடியது. கவர்னர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் த.வெ.க. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் ‘விசில்’ புரட்சி நடந்துள்ளது என்றும் விஜய்யை கவர்னர் வெகுவாக பாராட்டினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் விரிவாக பதிலளித்தார்.
இதனையடுத்து கடந்த மாத இறுதியில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாட்டை முதலமைச்சர் விஜய் நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்தில் தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் 2026–27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து துறைவாரியாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த திட்டமிட்டார். இன்று உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் துறைவாரியாக வரும் 22–ந் தேதி வரை நடைபெறும் என தெரிகிறது.
