தமிழகத்தில் தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், குதிரை பேரம் நடத்துவதாகவும் கூறி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து புகார் மனு அளித்தன.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், திமுக துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரை சந்தித்து, தவெக அரசு மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு தொடர்பு இல்லாத ஜான் ஆரோக்யசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய 2 பேரும், அமைச்சர்களை விட அதிகாரம் பெற்றவர்களாக அமைச்சரவை கூட்டம் மற்றும் அரசு சார்ந்த உயர்நிலைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள், முதல்வர் முன்னிலையில் அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் கேவலமான நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு சம்பந்தமில்லாத இருவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு என்ன அதிகாரம் உள்ளது என்று நாங்கள் ஆளுநரிடம் கேட்டோம். அதற்கு, “அவர்கள் அவசியம் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனில் அவர்களை அமைச்சராக்கியிருக்க வேண்டியதுதானே” என சிரித்துக் கொண்டே ஆளுநர் கூறினார். ஆளுநர் இவ்வாறு கூறியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனவே, ஆளுநர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதன் மூலம் இந்த ஆட்சியில் தவறு நடைபெறுவதை ஆளுநர் மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்.
குதிரை பேரத்தின் உச்சமாக நேற்று அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைது நடவடிக்கை என்பதே கிடையாது. ஆனால் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து, 5 மணி நேரம் அவரை துன்புறுத்தி, அவரை பயமுறுத்தி தவெகவில் சேர்வதற்கு வற்புறுத்தியுள்ளனர்.
இதேபோல் திமுக துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டினிடம், எந்த துறை அமைச்சர் பதவியை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு தேர்தலில் நில்லுங்கள்; தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்வார் என்று ஆசை காண்பித்துள்ளனர். இதை நான் ஆதாரத்துடன் தெரிவிக்கிறேன்.
இதேபோல் வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசனை தொடர்பு கொண்டு அவருக்கு 50 கோடி ரூபாய் தருவதாக கூறி தவெகவில் இணையுமாறு, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. இவை அனைத்தையும் புகாராக ஆளுநரிடம் வழங்கி உள்ளோம்.
ஆள் பிடிப்பதற்காகவே இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்.
ஆளுநர் வேண்டாம் என்று சொன்னதுதான் திமுக. இன்றுவரை அதில் அழுத்தமான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்னும் கூட ஆளுநர் ஆய்வு செய்ததை முதன் முதலில் எதிர்த்தவர் உதயநிதி ஸ்டாலின்தான். அது பாலிசி மேட்டர். ஆனால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்திற்கு செல்லும்போது சில வரைமுறைகள் உள்ளன.
நீதிமன்றத்தில், இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளித்தீர்களா என்று கேட்பார்கள். அதற்காகத்தான் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கையை நாடி செல்வோம் என்றார்.
ஆளுநரிடம் அதிமுக புகார் மனு
இதேபோல், அதிமுக சார்பில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக மாநிலங்களவை எம்.பி.யும், தலைமை வழக்கறிஞருமான இன்பதுரை ஆகியோர், ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மனு அளித்த பிறகு அதிமுக தலைமை வழக்கறிஞர் இன்பதுரை கூறுகையில், “ஆளுநர் தனது அதிகாரம் மூலம் எங்கள் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதவுர இல்லை என்ற நிலையில், குதிரை பேரத்தை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிய ஆளுநர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இதுகுறித்து ஆளுநரிடம் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் அதில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால், 167வது விதியின் கீழ் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை ஆளுநரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
குதிரை பேரம் நடைபெறுவதாக நாங்கள் மட்டும் கூறவில்லை. குதிரை பேரத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மதிமுக தலைவர் வைகோ, குதிரை பேரம் நடபெற்றதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். திமுகவும் குதிரை பேரம் நடைபெற்றதாக கூறியுள்ளது.
இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடைபெறுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ரகசிய காப்பை மீறும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் சம்பந்தமில்லாத இரண்டு பேர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து ஆளுநர் கண்டும் காணாமல் இருக்க முடியாது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
