‘‘திமுக எதிர்ப்பு என்பதை விட, திமுக வெறுப்பை அவர் அரசராக பேசிக் கொண்டிருக்கிறார். எதிர்ப்பு என்பது வேறு; வெறுப்பு என்பது வேறு’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘பொதுக்கூட்டம், மாநாடு என வழக்கமான அரசியலைத்தான் செய்கிறார் விஜய். விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒவ்வொரு முறையும் அவங்க அனுமதி கொடுக்கும்போது இதே மாதிரி தான் கொடுப்பாங்க. இது ஒன்னும் புதுசு கிடையாது. விஜய்க்கு புதுசு. எங்களுக்கு 35 வருஷமா இது பழகிப்போச்சு. கூட்டணியில் இருந்தாலும் காவல்துறையினர் வழக்கமாக தருகிற நிபந்தனைகள் தான் அவருக்கும் அளிக்கப்படுவதாக நான் நம்புகிறேன். அவருக்கு வேறு எந்த வகையிலும் அரசோ, காவல்துறையோ நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை. சுதந்திரமாக பயணிக்கிறார். சுதந்திரமாக அவர் பேசுகிறார்.
திமுக எதிர்ப்பு என்பதை விட, திமுக வெறுப்பை அவர் அரசராக பேசிக் கொண்டிருக்கிறார். எதிர்ப்பு என்பது வேறு; வெறுப்பு என்பது வேறு. அவர் தான் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த அவர் இதுவரை பேசியதாக தெரியவில்லை. திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை வெறுப்பு அரசியலாக முன்வைக்கிறார். வெறுப்பு அரசியல் மக்களிடத்தில் பெரும் எடுபடாது. ஆகவே அவருடைய செயல் திட்டங்கள் எதிர்கால களப்பணிகள் ஆகிவை குறித்த அவர் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடத்திலே இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் தீனி போடுவதாக தெரியவில்லை.
அவர் வாய் திறந்து எதுவும் பேசியதாக தெரியவில்லை. அப்படி ஒரு கருத்து அவரிடத்தில் இருந்ததா? என்றும் தெரியவில்லை. 30, 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. பேரணிகள் நடந்திருக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் கணக்கில் அடங்காதவை. இன்றைக்கு ஈழத்தவர்கள் பற்றி பரிதாபமாக காட்டிக் கொள்கிற முயற்சி வெறும் அரசியலுக்கானது என்று தான் கருத வேண்டி இருக்கிறது. இந்த உணர்வு உண்மையான உணர்வாக இருந்திருக்குமனால் அப்போதே அது வெளிப்பட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை.
அதிமுக ஒரு பெரிய மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அது ஒரு திராவிட இயக்கம், பெரியார் கொள்கைகளையும், அண்ணார் கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு மக்களுக்கு பணியாற்றிய ஒரு இயக்கம். இன்றைக்கு சங்கப் பரிவாரங்களின் கட்டுப்பாட்டுக்கு போய் விடுமோ என்கிற ஐயத்தை எழுப்பும் வகையில் அதிமுக தலைவர்களின் போக்குகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் கவலை அளிக்க கூடிய ஒன்றுதான்’’ திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்
