பத்திரிகையாளர் ஒருவர் KPY பாலா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பலரும் பாலாவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தான் ஒரு சர்வதேச கைக்கூலி அல்ல, வெறும் தினக்கூலி தான் என்று அவர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கலக்கப்போவது யாரு புகழ் பாலா சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்தார். பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், பாலா செய்துவரும் சமூக சேவைகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என சந்தேகம் எழுப்பப்பட்டது.
சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பாலா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அந்த வீடியோ வைரலானது. அதில், பாலா ஆம்புலன்ஸ் கொடுத்தது போலியான எண் கொண்டது என விமர்சிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, பலரும் நடிகர் பாலாவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பாலா. அதில் பேசியுள்ள கே.பி.ஒய் பாலா, “ஆம்புலன்ஸ் நம்பர் பிளேட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை இருந்தது உண்மை. அதை உடனே கண்டறிந்து, மற்றொரு ஆம்புலன்ஸை வழங்கிவிட்டேன். நான் வாங்கி தரும் வாகனங்களை, அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள், அதனால் நம்பரை மறைத்து கொடுக்கிறேன். இந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால் இந்த நல்ல செயல்களை யாரும் பேசுவதில்லை” என்று கூறினார்.
மேலும், “எனது காரை சொந்த உழைப்பில் வாங்கினேன். அது போலியான எண்ணுடன் இல்லை. நான் ஒரே ஒரு படத்தில் நடித்தேன். அதற்காக இவ்வளவு வன்மத்துடன் விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை சர்வதேச கைக்கூலி என்கிறார்கள். ஆனால் நான் தினக்கூலி.
‘கலக்கப்போவது யாரு’, நிகழ்ச்சி தொகுப்பு, விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் புரமோஷன்கள், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதித்த பணத்தில் மட்டுமே உதவிகள் செய்கிறேன். வெளிநாட்டு பணம் என்று எதுவும் இல்லை. என்னிடம் அறக்கட்டளை இல்லை, மக்களிடம் நிதி திரட்டவும் இல்லை,. எனக்கு யூடியூப் சேனல் இல்லை. இன்ஸ்டாகிராமில் மட்டுமே பதிவிடுகிறேன், அதில் பணம் இல்லை.
நான் பெரிய மருத்துவமனை கட்டுவதாக சொல்லவில்லை. வீடு கட்ட வாங்கிய அரை கிரவுண்டு நிலத்தில், அமுதவாணனிடம் மேலும் கால் கிரவுண்டு வாங்கி, ஒரு சிறிய கிளினிக் அமைக்கிறேன். ஒரு நாள் கூலி 850 ரூபாய், ஆனால் சிகிச்சைக்கு 1200 ரூபாய் செலவாகிறது. எனவே, எங்கள் பகுதியில் கிளினிக் தேவை. இதற்கு செவிலியர், மருத்துவர், பராமரிப்பு செலவுகளை எனது நிகழ்ச்சி வருமானத்தில் செலவிடுவேன்” என்று தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து “மக்கள் எனக்கு துணையாக இருக்கும் வரை, எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் சேவையை நிறுத்த மாட்டேன். இந்த வீடியோவை வெளியிடுவதற்கு காரணம், என்னைப் பார்த்து உதவி செய்யும் மற்றவர்கள் பயப்படக் கூடாது என்பதற்காகவே” என்று பாலா தெரிவித்துள்ளார்.
