பிற கட்சிகளில் இருந்து த.வெ.க.வில் இணைந்தவர்களை மனதார வரவேற்பதாக தெரிவித்த புஸ்ஸி ஆனந்த், முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் பதவிகள் விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். மற்ற கட்சிகளில் இருந்து த.வெ.க.வில் இணைந்தவர்களை மனதார வரவேற்பதாகத் தெரிவித்த அவர், கட்சியின்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி புதிய உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையும் கவனிப்பும் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
விழாவில் பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது என்றார். விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளில் மக்கள் திரளாகக் கூடியதே, இந்த நம்பிக்கைக்குச் சான்று என்று அவர் சுட்டிக்காட்டினார். எந்தப் பதவியும் இல்லாமல் கட்சிக்காக உழைத்தவர்களை, இன்று அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உயர்த்தியது தளபதி மட்டும்தான் என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும், புதிதாக இணைந்தவர்கள் எவ்வித அச்சமும் இன்றி, பழைய நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் அனைவரும் இனி த.வெ.க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு உரிய பதவிகள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
த.வெ.க சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலப்பணிகள் குறித்துப் பேசிய அவர், குறிப்பாக கீழ்க்கண்ட திட்டங்களைச் சுட்டிக் காட்டினார். விலையில்லா விருதகம், நூலகம் மற்றும் கல்விப் பயிலகம், ரொட்டி, முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம், வீடு கட்டும் திட்டம். விழாவின் ஒருபகுதியாக, தலைவர் தளபதியின் மனிதாபிமானத்தைப் போற்றும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை புஸ்ஸி ஆனந்த் பகிர்ந்துகொண்டார். விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற பழனிச்செல்வி என்ற பெண்ணின் மருத்துவச் செலவுகளை முழுமையாகத் தலைவர் ஏற்றுக் கொண்டதாகவும், அவர் குணமடைந்த பின் நேரில் சென்று ஆசி வழங்கியதாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டார். இறுதியாக, மக்கள் நலனுக்காக உழைக்கத் தயாராக இருக்கும் இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட தலைவர், முதலமைச்சராக இருப்பது தமிழக மக்கள் செய்த பாக்கியம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
