மதுரை மாவட்டம் வண்டியூரை சேர்ந்தவர் பொன்ராம். இவருடைய மகன் அரவிந்த் சரத்(வயது 33). இவர் கடந்த 2019-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் ஏனாதியை சேர்ந்த தேன்மொழி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் மீனாட்சி என்ற பெண் குழந்தை உள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை விட்டு பிரிந்த அரவிந்த் சரத், வண்டியூரில் உள்ள தனது தந்தை, மகள் மீனாட்சியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வண்டியூரை சேர்ந்த ஒருவரின் மனைவியான பூபதிக்கும் (28), அரவிந்த் சரத்துக்கும் பழக்கும் ஏற்பட்டது. இதை கண்டித்த பூபதியின் அண்ணன் வாசுதேவனை, அரவிந்த் சரத் கொலை செய்துள்ளார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர், கள்ளக்காதலி பூபதியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
பின்பு அவர் பரவை அருகே உள்ள அதலை கிராமத்தில் மகள் மீனாட்சி மற்றும் பூபதியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதன் பின்னர் அரவிந்த் சரத்துக்கும், பூபதிக்கும் கோகில பிரியா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தனது மனைவி பூபதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அரவிந்த் சரத் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
நேற்று முன்தினம் இரவில் மதுபோதையில் அரவிந்த் சரத் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவர் மீது ஆத்திரத்தில் பூபதி இருந்தார். திடீரென பெரிய கல்லை தூக்கி வந்து கணவர் தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அரவிந்த் சரத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.
