மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் ரோபோ சங்கர் (வயது 46) உடல்நலக்குறைவு காரணமாக பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்றிரவு 8:30 மணிக்கு உயிரிழந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் பல காமெடி நிகழ்ச்சியில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி காமெடி நட்சத்திரமாக உயர்ந்தவர். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ரோபோ சங்கர் கமலஹாசனின் தீவிர ரசிகர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் ஐந்து மாத காலமாக உடல்நிலை குறைவால் ரொம்பவே அவதிப்பட்டு வந்தார். இதனால் இவருடைய தோற்றம் சற்று மாறுபட்ட நிலையில் இருந்ததால் பல சர்ச்சைகளில் இவருடைய பெயர் அடிபட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடல் எடை குறைந்து மெலிதாக காணப்பட்டார். மஞ்சள் காமாலை ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். மீண்டும் அவர் பிழைப்பதே கஷ்டம் என அனைவரும் பேசிய நிலையில், அதில் இருந்து மீண்டு வந்த தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை அனைவரும் பார்த்து வியந்து போகும் அளவிற்கு அம்பானி வீட்டு கல்யாணம் போல நடத்தினார்.
ரோபோ சங்கர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த நிலையில், தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் மீடியா முன் எல்லா உண்மையை போட்டு உடைத்தார். ‘‘எந்த ஒரு விஷயமும் தனக்கு வந்தால் தான் காய்ச்சலும் தலைவலியும் தெரியும் என்பது போல பட்ட பின்பு தான் இவருக்கு புத்தி தெரிந்திருக்கிறது. போதை என்பது தவறான ஒரு பாதை. அதற்கு முன் உதாரணமாக உங்கள் அனைவரது முன்னாடியும் நான் அவஸ்தைப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறேன்.
சமீபத்தில் அனைவரும் என்னைப் பற்றியான விஷயங்களை யூடியூப் மூலமாக தெரிந்திருப்பீர்கள். எனக்கு மஞ்சள் காமாலை வந்ததால் படாத பாடு பட்டிருக்கிறேன். அதற்கு காரணம் சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள் என்னிடம் இருந்ததால் இந்த நிலைமையை நான் அனுபவித்து இருக்கிறேன்.
ஆறு மாதமாக சாவின் விளிம்பு வரை சென்று அதனுடைய கஷ்டங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்து இருக்கிறேன். அதனால் எல்லா கெட்ட பழக்கங்களையும் தற்போது அறவே விட்டுவிட்டு நல்ல உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, முறையான உடற்பயிற்சி மற்றும் நல்ல நண்பர்களை என் அருகில் வைத்துக் கொண்டு என் உடம்பை தேற்றி இருக்கிறேன்.
அத்துடன் எப்பொழுதும் சிரித்துக் கொண்டு சந்தோசமாக இருங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனக்கு பின் ஒரு குடும்பம் நம்மை நம்பி இருக்கிறது என்று நினைத்தால் இந்த போதை பழக்கத்தில் இருந்து ஈசியாக வெளிவந்து விடலாம். அதனால் தயவு செய்து கெட்ட பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம். என்னுடைய நிலைமையை பார்த்த பின்பாவது எல்லோரும் நல்வழியை பின்பற்றுங்கள்’’ என்று அறிவுரை கொடுத்திருந்தார்.
மீண்டு வந்து திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்தார். சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, படப்பிடிப்பின்போது அவர் மயக்கமடைந்துள்ளார். இதனால், பதறிப்போன சக நடிகர்கள் அவரை மீட்டு, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் மரமணடைந்துள்ளார்.
